மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

41 வயதில் சபரிமலைக்குச் சென்ற பெண் ஐஏஎஸ்!

41 வயதில் சபரிமலைக்குச் சென்ற பெண் ஐஏஎஸ்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்காத காலத்திலேயே 20 ஆண்டுகளுக்கு முன்பே பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்ற அனுமதியுடன் கோயிலுக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 1994 - 1995ஆம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கே.பி.வல்சலா குமாரி. இவர் தன்னுடைய 41ஆவது வயதில் சபரிமலைக்குச் சென்றுள்ளார். சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்ற பாரம்பரியம் நூற்றாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்தத் தடையை அகற்றக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், சபரிமலைக்கு அனைத்து வயதிலும் உள்ள பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்து.

இந்தச் சிறப்பு வாய்ந்த தீர்ப்புக்குப் பிறகு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிவந்த நிலையில், தனது 20 ஆண்டுகளுக்கு முந்தைய அனுபவங்களை வல்சலா குமாரி செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

"1994ஆம் ஆண்டில் நான் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியராக இருந்தேன். அப்போது சபரிமலை சீசனின்போது பக்தர்களுக்கு வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை என்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவையடுத்து, என்னை சபரிமலைக்குச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், பக்தர்கள் மிகவும் புனிதமாகக் கருதப்படும் 18 படிகளை நான் கடந்து செல்லவில்லை. என்னுடைய இரு கைகளையும் சேர்த்து சபரிமலை ஐயப்பனைக் கும்பிட்டுவிட்டு எனது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டேன்.

பக்தர்களுக்குத் தற்காலிகமாக கழிவறைகள் கட்ட ஏற்பாடு செய்தேன். பம்பை ஆற்றில் தேங்கிக்கிடந்த துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டேன். பக்தர்களுக்குச் சுகாதாரமான குடிநீர் வசதிகள், தங்குமிடங்கள், தற்காலிக ஓய்வறைகள் போன்றவை கட்ட ஏற்பாடு செய்தேன்.

ஆனால், நான் கோயிலுக்குள் செல்லவில்லை. நான் கோயிலின் பிராகாரத்தோடு நின்றுவிட்டேன், சபரிமலை ஐயப்பனையும் தரிசிக்கவில்லை, 18 படிகளைக் கையெடுத்து கும்பிட்டு வந்தேன்.

ஆனால், எனக்கு 50 வயதைக் கடந்தபின் நான் சபரிமலைக்குச் சென்று மனதார ஐயப்பனை தரிசனம் செய்தேன். இப்போது உச்ச நீதிமன்றம் பெண்களும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை முழுமனதோடு வரவேற்கிறேன்.

சபரிமலைக்குச் செல்ல வயது தடையில்லை. மனதும், உடலும் சுத்தமாக இருக்கும் யாவரும் அங்கு சென்று ஐயப்பனை தரிசிக்கலாம். இனிவரும் ஆண்டுகளில் பெண்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தேவஸ்தானம் செய்ய வேண்டும். பெண்களை வழிநடத்தும் பொறுப்பைக் குடும்ப உறுப்பினர்கள் செய்யலாம். பெண்கள் எந்தவித இடையூறுமின்றிச் செல்ல வழி செய்ய வேண்டும்” என்று வல்சலா குமாரி தெரிவித்தார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon