மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான்!

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான்!

இந்திய – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் இரு நாட்டு ஹெலிகாப்டர்களும் பறக்கக் கூடாது என்பது இரு நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட விதிமுறையாகும். ஆனால், விதிமுறைகளை மீறி நேற்று (செப்டம்பர் 30) மதியம் சுமார் 12.13 மணியளவில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதி அருகேயுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக் கோடு வழியே ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி உள்ளே நுழைந்தது. இதுபற்றி எச்சரிக்கை விடுத்தும், எந்த எதிர்வினையும் இல்லாததால், ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

இவ்வாறு அமைதி உடன்படிக்கை விதிகளுக்கு எதிராக எல்லைக் கோட்டுக்குள் நுழையும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த இரு நாட்டு அரசுகளுக்கும் உரிமை உண்டு. தற்போது எல்லைக்குள் ஊடுருவிய ஹெலிகாப்டர் எவ்வளவு தூரம் வந்துள்ளது போன்ற தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்று மேஜர் ஜெனரல் அஷ்வனி கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி 21 அன்று ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் பாகிஸ்தானின் மி–17 ரக ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி பறந்துள்ளது. அதற்கு அடுத்த நாளே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் யூரி மண்டலத்திற்குட்பட்ட சாருண்டா பகுதியில் அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பதும் நினைவுகூரத்தக்கது.

ஐநா பொதுசபைக் கூட்டத்தில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே வாக்குவாதம் நடந்துவரும் நிலையில் இந்த அத்துமீறல் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் பேசும்போது பாகிஸ்தானுடன் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயங்கரவாத தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், “பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதன் மூலம் நாங்கள் குற்றம்சாட்டப்படுகிறோம். பேச்சுவார்த்தைகள் சுமுகத் தீர்வைத் தரும் என நம்புகிறோம். கடந்த ஐந்து வருடங்களில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் பயங்கரவாதம் குறித்தும் அதைப் பாதுகாப்பவர்கள் குறித்தும் பேசி வருகிறோம். ஐநா சபையில் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியும், ஆயுதங்களை வழங்கியும் அவர்களை நாட்டின் விடுதலை வீரர்கள் போல் கொண்டாடுகிறது” என்றார்.

ஞாயிறு, 30 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon