எஸ்பிஐ: பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் நாளொன்றுக்கு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.20,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் எஸ்பிஐ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், டெபிட் கார்டுகள் மூலம் தினசரி அதிக பணம் எடுக்க நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர் வரம்பு கொண்ட டெபிட் கார்டுகளுக்கு மாறிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ பிளாட்டினம் கார்டு வைத்திருப்பவர்கள் தினசரி ஒரு லட்சம் ரூபாய் வரையும், தங்க கார்டு வைத்திருப்பவர்கள் தினசரி ரூ. 50,000 வரையும் எடுத்துக் கொள்ளலாம். தங்கள் வங்கிக் கணக்குகளில் அதிகபட்ச தொகையை இருப்பு தொகையாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, எஸ்பிஐ வங்கி இதுபோன்ற பல கடுமையான அறிவிப்புகளால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.