மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

செலவுகளைக் குறைக்க அரசு திட்டம்!

செலவுகளைக் குறைக்க அரசு திட்டம்!

மின்சாரத்துக்கான மானியத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே அனுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு நுகர்வோருக்கு மின்சார மானியம் வழங்குவதற்கான கூடுதல் செலவுகளைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டத்தின் வாயிலாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியத்தை அனுப்பி, குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுவிட்டால், தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரச் செலவுகள் 25 முதல் 40 விழுக்காடு வரை சரிந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.6 ஆகக் குறையும். இதனால் தொழில் நிறுவனங்கள் தங்களது வருவாயை உயர்த்திக்கொள்ள முடியும்.

எனினும், இந்த முன்மொழிதலால் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் மின் விநியோக நிறுவனங்கள் மேலும் சிக்கலுக்கு ஆளாகும். மின் விநியோக நிறுவனங்கள் தங்களது இழப்புகளைக் குறைப்பதற்கே போராடி வருகின்றன. மாநில அரசுகளோ தொழிற்துறை மற்றும் வர்த்தக நுகர்வோருக்கான மின் கட்டணங்களை உயர்வாக வைத்து குடும்பங்களுக்கான மின் கட்டணத்துக்கு மானியம் வழங்கி வருகின்றன. இதனால் வர்த்தக நுகர்வோருக்கான கட்டணம் குடும்பங்களுக்கான கட்டணத்தை விட ஏறத்தாழ இருமடங்காக உள்ளது. மானியங்களுக்கான கூடுதல் செலவுகள் நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக உயர்வாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon