மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

பாஜக தவறுக்கு காங்கிரஸ் பொறுப்பாகாது: சிதம்பரம்

பாஜக தவறுக்கு காங்கிரஸ் பொறுப்பாகாது: சிதம்பரம்

ரஃபேல் விவகாரத்தில் பாஜக அரசு செய்த தவறுக்கு எப்படி பொறுப்பாக முடியும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று (அக்டோபர் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதை தடுக்க முடியாது என்றுதான் கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றால் இன்றைய அரசு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குகளை போட்டுக்கொண்டு இருக்கும்.

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் உள்ளது. மேலும் சில கட்சிகள் சேர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.

ரஃபேல் குறித்த கேள்விக்கு, “126 விமானங்கள் வாங்குவதை ரத்து செய்து 36 விமானங்களை வாங்குவது என்று காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யவில்லையே. தனியார் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் ஆட்சியில் யோசனை சொல்லவில்லை. பின்னர் எதற்காக ராணுவ அமைச்சர் எங்கள் மீது பழி கூற வேண்டும். அவரும் அவரது அரசும் செய்த தவறுக்கு காங்கிரஸ் எப்படிப் பொறுப்பாகும்?

காங். ஆட்சியில் நிர்ணயித்த விலையைவிட 9% குறைவு என்றால் கூடுதல் விமானங்களை வாங்காதது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டாலர் விலை அதிகரித்துவருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என பலர் கூறியுள்ளனர்.

இலங்கை போர் நடந்தபோது இன்றைய அதிமுக தலைவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதே அவர்களுக்கு தெரியாது.

‘காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் துறையில் தரகர்களோடு பேரம் பேசப்பட்டது’ என்ற நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு தவறானது. பாதுகாப்புத் துறை தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு என்ன ஆளுமை உள்ளது என்று தெரியவில்லை. பாஜகவின் நான்கரை ஆண்டு ஆட்சியில் மூன்று ராணுவ அமைச்சர்கள் இருந்துள்ளனர். ஆனால், எதையும் உருப்படியாக செய்யவில்லை” என்று குறிப்பிட்டார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon