மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ஆன்லைன் ஷாப்பிங்கில் வட்டியில்லாக் கடன்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் வட்டியில்லாக் கடன்!

பண்டிகை சீசனின் போது வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் வட்டியில்லாக் கடன் வழங்கும் சலுகையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியாவின் ஆன்லைன் மின்னணு வர்த்தகச் சந்தையில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனமும் இந்தியாவின் ஃபிளிப்கார்ட் நிறுவனமும் கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வாரி வழங்கும். இந்த முறை, குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சலுகை மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் திட்டத்தையும் இவ்விரு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, வட்டியில்லாமல் ரூ.60,000 வரையில் கடன் வழங்கப்படுகிறது.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்கள் அல்லது செயலிகள் வாயிலாகப் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை வாயிலாக ஆன்லைன் ஷாப்பிங் பிரிவில் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இலக்கைத் தங்களால் அடைய இயலும் என்று அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரான மணிஷ் திவாரி, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இச்சலுகை வாயிலாக ரூ.50,000 கடன் பெற்றதாகவும், அதைக் கொண்டு சட்டைகள் வாங்கியதாகவும் டெல்லியைச் சேர்ந்த ஊடகவியலாளரான டோலா மஜூம்தார் தெரிவித்துள்ளார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon