உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: கணவர் வாக்குவாதம், மனைவி தற்கொலை!

தவறான உறவு தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது என்று சொல்லிக் கணவனுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் தவறான உறவானது குற்றமாகாது. அதற்கான தீர்வை விவகாரத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது.
இது தொடர்பாக, ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியில் நடந்துள்ளது. இப்பகுதியில் ஜான் பால் பிராங்க்ளின் என்பவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். ஜான் பால், கடந்த 2016ஆம் ஆண்டில் புஷ்பலதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையில், ஜான்பால் வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதை மனைவி புஷ்பலதா கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஜான்பால் மிக அழுத்தமாக “உச்ச நீதிமன்றமே தவறான உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி தவறில்லை” என்று உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே, நீ என்னைப் பற்றி புகார் செய்தாலும், அது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியான புஷ்பலதா, உச்ச நீதிமன்றமே தவறான உறவுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதால், இனி தன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்ற பயத்திலும், மனவேதனையிலும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.