மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

சிறப்புக் கட்டுரை: உலகெங்கும் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகள்: ஒரு கண்ணோட்டம்!

சிறப்புக் கட்டுரை: உலகெங்கும் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகள்: ஒரு கண்ணோட்டம்!

ஆர்.ருக்மணி

உலக பொருளாதாரம் என்ற தலைப்பில் தி எகனாமிஸ்ட் பத்திரிகை ஒரு சிறப்பு இதழை வெளியிட்டிருக்கிறது. இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பல முக்கியமான கருத்துகளை முன்வைக்கின்றன. இந்தக் கருத்துகளைத் தொகுத்து மின்னம்பலம் வாசகர்களுக்கு முன்வைக்கிறோம்.

ஒரு நாட்டின் மக்களிடையே இருக்கக்கூடிய வருவாயை ஒட்டின ஏற்றத்தாழ்வுகள் சமீப காலங்களில் 1980ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை பெரும்பான்மையான நாடுகளில் பெருமளவில் வளர்ந்திருக்கிறது. இதன் விளைவாக ஒவ்வொரு நாட்டிலும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. நமது நாட்டை எடுத்துக்கொண்டால், முகேஷ் அம்பானி சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய இல்லத்தில் 27 மாடிகள் உள்ளன. அந்த வீட்டில் பரப்பளவு 40,000 சதுரஅடியாகும். ஆனால், ஒரு குடிசையில் வாழும் குடிமகனோ சராசரியாக 300 சதுரஅடியில் வாழும் நிதர்சன நிலைமை நிலவுகிறது. இதைப்போன்று வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும் பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் வளர்ந்து வருகின்றன. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து. ஜெர்மனி போன்ற நாடுகளிலும், சுவீடன் போன்ற சமூக நலத்திட்டங்களுக்குப் பெயர்பெற்ற நாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்துள்ளன.

வருமான ஏற்றத்தாழ்வுகளின் தற்போதைய நிலை

வருமான ஏற்றத்தாழ்வுகள் எல்லா நாடுகளிலும் வளர்ந்திருக்கும் தருணத்திலும், இந்த ஏற்றத்தாழ்வின் அளவானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக உள்ளது. ஏற்றத்தாழ்வுகளை அளப்பதற்கு GINI COEFFICIENT என்ற ஓர் அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவுகோலின்படி வளரும் நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாகவும், வளர்ந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் சற்று குறைவான நிலையிலும் உள்ளது. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் ஏற்றத்தாழ்வுகளின் அளவு குறைவாகவும், தெற்கு ஆப்பிரிக்காவில் ஏற்றத்தாழ்வுகளின் அளவு மிக அதிகமாகவும் உள்ளது. சீனாவிலும் ஏற்றத்தாழ்வுகளின் அளவு வெகு அதிகமாக வளர்ந்துள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், சிலி போன்ற நாடுகளில்தான் 1980ஆம் ஆண்டில் இருந்ததை விட 2010ஆம் ஆண்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைந்துள்ளன.

ஒரு நாட்டின் மக்களிடையே நிலவும் வருமான/பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது அந்த நாட்டின் அரசாங்கம் பின்பற்றும் வளர்ச்சி பாதையின் அல்லது பொருளாதார கொள்கைகளின் விளைவாகும். பொதுவாக சைமன் குஷ்நட்ஸ் போன்ற பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது தொழில் வளர்ச்சி அடையும் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகும். தொழில் வளர்ச்சி அடைந்த நிலையில் பெரும்பாலான மக்கள் விவசாயத் துறையிலிருந்து மாறி தொழில் துறையில் பணிபுரியும் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் குறைந்துவிடும் என்ற கோட்பாடு நிலவி வந்தது. ஆனால், பல நாடுகளின் வளர்ச்சிப் பாதையை ஆராய்ச்சி செய்யும்போது இந்தக் கோட்பாடு உண்மையல்ல என்பது தெளிவாகிறது. ஏற்றத்தாழ்வுகள் குறையாதது மட்டுமல்லாமல், அவை அதிகரிக்கும் நிதர்சன நிலைமைதான் இன்று பெரும்பாலான நாடுகளில் உள்ளன.

வளர்ந்த நாடுகளிலும் சரி, வளரும் நாடுகளிலும் சரி... மேலும் மேலும் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி மக்களுக்கு ஒரு கோபம் / அக்கறை / கவலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றத்தாழ்வு என்பது பற்றி ஒவ்வோர் அரசாங்கமும் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் இன்று உண்டாகியிருக்கிறது. சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் சரி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சரி... பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது அரசாங்கம் செயல்பட வேண்டிய ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச நிறுவனங்கள் கூட, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் வளர்ச்சிப் பாதையை ஆசிய அரசுகள் மேற்கொள்ளாமலிருந்திருந்தால் அந்நாடுகளில் பெரும்பாலான மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல் கொண்டு வந்திருக்க முடியும் என்ற வாதத்தை இன்று முன்வைக்கின்றன. மேலும், தாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில், ஏற்றத்தாழ்வுதான் நாடுகளின் பெரும் பொருளாதாரப் பிரச்சினை என்ற முடிவுக்கு நிபுணர்கள் வந்தனர்.

ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான முயற்சிகள்

எல்லா நாடுகளும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான செயல்களில் ஈடுபடும் நிலையிலும், நாடுகளின் அணுகுமுறையில் வித்தியாசங்கள் உள்ளன. சில நாடுகள் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான வழியாக மக்களிடையே நிலவும் பல்வேறுவிதமான வாய்ப்புகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. அமெரிக்கா, சீனாவை இதற்கு உதாரணமாகக் கூறலாம். சில நாடுகள், விளைவுகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் ஏற்பாடுகளைச் செய்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் விளைவுகளின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முயற்சி செய்கின்றன.

அமெரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, சுவீடன் ஆகிய நாடுகளின் வளர்ச்சி பாதையை ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் மூன்று தகவல்கள் தெளிவாகத் தெரிகின்றன.

ஒன்று, ஒரு நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மாற்றக்கூடிய திறன் அந்த நாட்டின் அரசாங்கத்திடம்தான் உள்ளது. அரசாங்க திட்டங்களாலும், அரசாங்க அணுகுமுறையினாலும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இரண்டு, வளர்ந்து வரும் நாடுகளில் நிலவக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் அந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. மேலும் ஏற்றத்தாழ்வுகள் மக்கள் முன்னேறுவதற்கும் தடையாக உள்ளன.

மூன்று, ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காக அரசாங்கங்கள் செய்ய வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, கூட்டுக்கொள்ளை முதலாளித்துவத்தை (Crony Capitalism) தாக்குவது. இரண்டாவது, இளைய சமுதாயம் வளருவதற்கான முதலீட்டை மேற்கொள்வது.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவைப் பொறுத்தவரை ஒருபுறம் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நிலைமை இன்றும் உள்ளது. மறுபுறம், பெரும் பணக்காரர்கள் (billionaires) அதிகமாக இருக்கும் நாடாகவும் உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சூழலில் அரசியல்வாதிகளுக்கும், பெரும் தொழிலதிபர்களுக்கும் இருக்கும் நெருக்கம் ஒருபுறம் இருக்க, அரசியல்வாதிகளே பெரும் முதலாளிகளாக இருக்கும் நிலைமையும் கூட்டுக்கொள்ளை முதலாளித்துவத்தை வலுவடைய செய்கிறது. இதற்கு உதாரணமாக இந்தியாவில் அம்பானிக்கு வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமத்தைக் கூறலாம்.

இந்தக் கூட்டுக்கொள்ளை முதலாளித்துவத்தைத் தகர்த்தெறிவதற்கான ஒரே வழியாகப் பரவலான வளர்ச்சி ஏற்படுவதற்கான முக்கிய முயற்சியாக இளைய தலைமுறை வளர்வதற்கான முதலீடுகளை இந்தியா போன்ற நாடுகள் மேற்கொள்ள வேண்டும். கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும், வறுமையிலும், விளிம்பு நிலையிலும் இருக்கும் மக்களுக்காகப் பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமும், இந்திய அரசாங்கம் இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கட்டுரையாளர் குறிப்பு:

ஆர்.ருக்மணி, பொருளாதார ஆய்வாளர். MIDS நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமீப காலம் வரை உணவுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநராகப் பணிபுரிந்தவர். இத்துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர். பல கட்டுரைகளையும் ஆய்வேடுகளையும் எழுதியுள்ளார்.

முந்தைய கட்டுரை: பூச்சிக்கொல்லிகளுக்கு மரணம் எப்போது?

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018