மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாலும், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறை சமையல் எரிவாயுவின் விலை மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, தேசியத் தலைநகர் டெல்லியில் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2.89 உயர்த்தப்பட்டு, ரூ.502.4 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.1.49 உயர்த்தப்பட்டு ரூ.499.51 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மானியமில்லா சிலிண்டரின் விலை அதிரடியாக 59 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விவரங்களைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கான மானியம், நேரடிப் பலன் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குக்கே அரசு தரப்பிலிருந்து நேரடியாகச் செலுத்தப்படுகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கான மானியம் ரூ.376.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் மானியம் ரூ.320.49 ஆக இருந்தது. மானியம் உயர்த்தப்பட்டுள்ளதால் சிலிண்டர் விலை உயர்வின் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon