பேருந்துக் கட்டணம் உயராது: அமைச்சர்!


டீசல் விலை உயர்வு போக்குவரத்துத் துறைக்கு சவாலாகவே இருந்தாலும், பேருந்துக் கட்டண உயர்வை கொண்டுவர அரசு தயாராக இல்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. மேலும் மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக அதிகரிக்கும் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும், இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை கே.கே.நகரில் இன்று (அக்டோபர் 1) செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், பெட்ரோல், டீசல் விலையுயர்வு காரணமாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “பேருந்துக் கட்டணத்தை தற்போதுதான் உயர்த்தி இருக்கிறோம். இனிமேலும் பேருந்துக் கட்டண உயர்வைக் கொண்டுவந்து மக்கள் தலையில் சுமையை ஏற்ற அரசு தயாராக இல்லை. டீசல் விலை உயர்வு என்பது போக்குவரத்துத் துறைக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. டீசல் மானியத்தை உயர்த்த முதல்வர், துணை முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.