மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

சபரிமலை: பெண்களுக்குத் தனி வரிசை இல்லை!

சபரிமலை: பெண்களுக்குத் தனி வரிசை இல்லை!

சபரிமலையில் ஐயப்பனை வழிபடுவதற்குப் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கென்று தனி வரிசை அமைப்பது சாத்தியமில்லாதது என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் சபரிமலையிலுள்ள ஐயப்பனை தரிசிக்க அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்படலாம் என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. பல ஆண்டுகளாக 10வயதிற்குட்பட்ட பெண்களும் 50 வயதிற்கு மேலுள்ள பெண்களும்தான் சபரி மலைக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அனுமதி மறுப்பிற்கு காரணமாகப் பெண்களின் மாதவிடாயைக் காரணம் காட்டி, அதனால் தீட்டுபட்டு கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அரசியல் சாசனத்தின்படி இரு பாலரும் சமமானவர்கள், பெண்களை மாதவிடாயைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஒரு வகையான தீண்டாமை என்று கண்டனம் தெரிவித்து அனைத்து வயது பெண்களுக்கும் சபரிமலையில் வழிபட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் எதிர்ப்பு தெரிவித்த திருவாங்கூர் தேவஸ்தானமும், ஐய்யப்பன் கோயில் நிர்வாகமும் பின்னர் பெண்கள் வந்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளை சபரி மலையில் செய்யத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக தேவஸ்தானத்தின் தலைவர் ஏ.பத்ம குமார் நேற்று (செப்-30) பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, தான் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து பேசியதாகவும் அவர் தேவையான அனைத்து உதவிகளையும் கோயிலுக்குச் செய்வதாக உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார். சபரிமலையில் பெண்களுக்கெனத் தனி தங்குமிடங்கள் மற்றும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் தனி வரிசை அமைப்பது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

தீர்ப்பைத் தொடர்ந்து பெண் செயற்பாட்டாளர்கள்தான் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு, ஆனால் பெண்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறினார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மீளாய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தேவஸ்தானம் பரிசீலித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon