மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

மரணத்துக்குப் பின் போற்றப்படும் அதிகாரி!

மரணத்துக்குப் பின் போற்றப்படும் அதிகாரி!

இந்தோனேஷியாவில் நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நடுவே, விமானம் ஓடுபாதையில் இயங்க வழிகாட்டினார் அந்நாட்டு விமானத் துறை அதிகாரி குணவான். தனது மரணத்துக்கு முன்னர், பலரைக் காப்பாற்றியதற்காக இவரைக் கொண்டாடி வருகின்றனர் இந்தோனேஷிய மக்கள்.

கடந்த 28ஆம் தேதியன்று இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசித் தீவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இரண்டு முறை தொடர்ந்து ஏற்பட்ட நில நடுக்கத்தினால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின், அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிறுவனமானது 6.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியிட்டது. நில நடுக்கத்தினால் சுலவாசித் தீவிலுள்ள பலூ மற்றும் டோங்க்லா நகரங்கள் பலத்த சேதமுற்றன. அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பலூ நகரைச் சுனாமி தாக்கியதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பாதிப்புகளினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று இந்தோனேஷிய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 832 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பேர் இந்த நில நடுக்கம் மற்றும் சுனாமியினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்த இழப்புகளுக்கு மத்தியில், பலரது உயிரைக் காப்பாற்றிய 21 வயது இளைஞர் ஒருவரைப் போற்றி வருகின்றனர் இந்தோனேஷிய மக்கள். பலூ விமான நிலையத்தில் ஏர் டிராபிக் கண்ட்ரோலரான அந்தோனியஸ் குணவான் அகுங் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று நில நடுக்கம் ஏற்பட்டபோது பணியில் இருந்தார். நில நடுக்கம் ஏற்பட்டபோது, பாடிக் ஏர் எனும் விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்தது. ஓடுபாதையில் அதனைச் செலுத்தாமல், அந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்று தனது சக ஊழியர்களிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார் குணவான். அதேபோல, அந்த விமானம் விண்ணில் பறக்கும் வரை தனது பணியைத் தொடர்ந்துள்ளார். ஆனால், அவர் இருந்த கட்டடம் நில நடுக்கத்தினால் பாதிப்புக்குள்ளானது. அதிலிருந்து தப்பிக்க, நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும், அவர் காயம் பலமாக இருந்தது. உயர் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஒன்றை அங்கிருந்த அதிகாரிகள் வரவழைப்பதற்குள், குணவான் மரணமடைந்தார்.

இறப்புக்கு முன்னர், விமானத்தில் இருந்த பலரது உயிரைக் காப்பாற்றிய குணவான் இந்தோனேஷிய மக்களால் தற்போது ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறார்.

ஞாயிறு, 30 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon