மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஆப்பிள் நிர்வாகி குடும்பத்துக்கு இழப்பீடு!

ஆப்பிள் நிர்வாகி குடும்பத்துக்கு இழப்பீடு!

லக்னோவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன நிர்வாகி விவேக் திவாரியின் குடும்பத்தினரை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று இரவு, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஆப்பிள் நிறுவன நிர்வாகியான விவேக் திவாரி தனது தோழியுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, சோதனை சாவடியில் அவரது காரை நிறுத்தும்படி போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அவர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதையடுத்து, போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆப்பிள் நிறுவன நிர்வாகி விவேக் திவாரி மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்துவிசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று(அக்டோபர் 1) முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் தினேஷ் ஷர்மா ஆகியோர் விவேக் திவாரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடந்தது.

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவேக் திவாரியின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சமும், அவரது குழந்தைகளின் கல்வி செலவுக்கு ரூ. 5 லட்சமும், அவரது வயதான தாயாருக்கு ரு. 5 லட்சமும் என மொத்தம் ரூ. 35 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon