மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

எருமை இறைச்சி ஏற்றுமதி உயர்வு!

எருமை இறைச்சி ஏற்றுமதி உயர்வு!

இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. எனினும், ரூபாய் வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஏற்றுமதியானது 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் ஏற்றுமதியை விட 5 சதவிகிதம் கூடுதலாகும்.

ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.51,913 கோடி மதிப்பிலான பொருட்கள் இந்த ஐந்து மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டு ஏற்றுமதியை (ரூ.47,076 கோடி) விட 10.28 சதவிகிதம் அதிகமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் பங்கைக் கொண்டுள்ள பாஸ்மதி அரிசி, 2 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இந்தியா ஏற்றுமதி செய்த பாஸ்மதி அரிசியில் ஈரான் நாட்டுக்கு மட்டும் 36 சதவிகிதம் அளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிலிருந்து பாஸ்மதி அரிசியைக் குறிப்பிடத்தகுந்த அளவில் இறக்குமதி செய்துள்ளன.

எருமை இறைச்சியைப் பொறுத்தவரையில், பாஸ்மதியைத் தொடர்ந்து இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. ஏப்ரல் - ஆகஸ்ட்டில் 4.99 லட்சம் டன் அளவிலான எருமை இறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மதிப்பு அடிப்படையில் எருமை இறைச்சி ஏற்றுமதி 1,516 மில்லியன் டாலரிலிருந்து 1,534 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதியில் வியட்நாம் 50.6 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் அதிகளவில் எருமை இறைச்சியை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளன.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon