மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

அமைச்சருக்கு எதிராக திமுக வழக்கு!

அமைச்சருக்கு எதிராக திமுக வழக்கு!

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி திமுக சார்பில் 3000 பக்க ஆவணங்களோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு, அமைச்சர் வேலுமணி உள்ளாட்சித் துறை தொடர்பான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஆலந்தூரிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்திற்கு கடந்த மாதம் 10ஆம் தேதி சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். வேலுமணி பதவிவிலக வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி திமுக சார்பில் 3 ஆயிரம் பக்க ஆவணங்களோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், “உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவரின் சகோதரர்களின் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பினாமிகளுக்கும் ஒப்பந்தங்களை பெற்றிருக்கிறார். சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளிலும், மெட்ரோ பணிகள், ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள், மல்டி லெவல் பார்க்கிங் டெண்டர்களை முறைகேடாக தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை கோவை மாநகராட்சியில் 15 கோடி மதிப்பிலான டெண்டர்களை வேலுமணியின் சகோதரர்கள் எஸ்.பி செந்தில் மற்றும் எஸ்.பி அன்பரசனின் நிறுவனமான செந்தில் அன் கோ நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு டெண்டர் முறைகேடுகள் காரணமாக வேலுமணியின் பினாமி நிறுவனங்கள், சகோதர நிறுவனங்கள் குறைந்த கால அளவில் 3 ஆயிரம் மடங்கு லாபம் ஈட்டி இருக்கின்றன” என்று மனுவில் குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகராட்சியின் நிதி தேவையானது கடந்த 2013ஆம் ஆண்டில் 566 கோடியாக இருந்தது. ஆனால் வேலுமணி பதவி ஏற்ற பின் தவறான நிர்வாகத் திறனால் 2 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“கோவை மாநகராட்சியின் வங்கி கையிருப்பு 2015 -16ஆம் ஆண்டுகளில் 72 கோடியே 51 லட்சமாக இருந்தது. ஆனால் 2016 - 17 ம் ஆண்டுகளில் வங்கியில் கையிருப்பு எதுவும் இல்லாமல் பூஜ்ஜியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்” என்று சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதி,

“இதுகுறித்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரிடம் அளித்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்பு துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலான்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

மனு தாக்கலின் போது 3 ஆயிரம் பக்க ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களும் திமுக தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலுமணி பதில்

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018