மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

அரசியலுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிப்பு!

அரசியலுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிப்பு!

அரசியல் காரணங்களுக்காக கொள்கை முடிவெடுக்காமல், பெரும்பான்மை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அரசின் திட்டங்கள் இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

புதிய தலைமைச் செயலக கட்டிட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் விசாரணை ஆணையத்தை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு தொடர்பான புகார், விசாரணை ஆணையத்திடமிருந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இவ்வாறு ஆணையம் கலைக்கப்பட்டதையொட்டி விசாரணை ஆணையம் குறித்த வழக்கினை வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் தெரிவித்தனர்.

இவ்வழக்கு வாபஸ் பெற்றதையடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து இன்று (அக்டோபர் 1) நீதிபதி தனது உத்தரவில், “புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட 400 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை அரசு செலவு செய்தது. அதற்கு அடுத்து வந்த அரசு அந்தக் கட்டிடத்தை பயன்படுத்தாமல் வைத்து மருத்துவமனையாக மாற்றப் பல கோடிகளைச் செலவு செய்தது அதுமட்டுமல்லாமல் அந்தக் கட்டிடம் கட்ட முறைகேடு நடந்ததாகக் கூறி அதற்கு விசாரணை ஆணையம் அமைத்து 5 கோடி வரை செலவு செய்தது. இவ்வாறு அரசியல் காரணங்களுக்காக கொள்கை முடிவு எடுக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசானது, கட்சியின் எண்ணங்களை வைத்து திட்டங்களை உருவாக்கி அதில் அரசியல் செய்து மக்களின் பணத்தை வீணடிக்காமல் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பயனுள்ள திட்டங்களுக்கு வரிப்பணத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon