மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வழக்கு போடுவார்களா?

ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வழக்கு போடுவார்களா?

நூற்றாண்டு விழாவுக்கு பேனர் வைத்ததற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடருவார்களா என்று காவல் துறைக்கு சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசிய வழக்கு, ஐபிஎல் போராட்ட வழக்கு ஆகியவற்றில் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து சிறையிலிருந்து வெளிவந்த கருணாஸ், ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்பேன் என்றும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால் கூவத்தூரில் நடந்ததைக் கூறத் தயார் என்றும் அதிரடியாக பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை சாலி கிராமத்திலுள்ள கருணாஸின் இல்லத்தில் அவரை, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் அறந்தாங்கி ரத்தினசபாபதி இன்று (அக்டோபர் 1) சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கருணாஸ், “என் அமைப்பு சார்பாக ஒரு போஸ்டர் அடித்து ஒட்டினால் நான்கு வழக்கு போடுகிறார்கள். கண்டிக்கிறோம் என்னும் வார்த்தை அவ்வளவு பெரிய வன்முறையைத் தூண்டும் வார்த்தையா? ஜாதி வெறியைத் தூண்டும் வார்த்தையா அது? அதற்கு நான்கு வழக்குகள்.

நேற்று சாலை முழுவதும் அத்தனை பேனர்கள் வைத்திருந்தனர். அதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள். எங்கே அந்த அனுமதி கடிதத்தை கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். அந்த பகுதி காவல் அதிகாரிகளெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பேனரில் படம் இருந்த நிர்வாகிகள் மீதெல்லாம் வழக்கு போடச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களுக்கு ஒரு நியாயம்! ஊருக்கு ஒரு நியாயமா?. நீதிமன்றத்தை அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். சரியான நேரத்தில் சரியான பாடத்தை நீதிமன்றம் புகட்டும். சட்டம் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். வலியவனுக்கு ஒரு சட்டம், எளியவனுக்கு ஒரு சட்டமா” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

அமைச்சர்கள் விமர்சனம் குறித்து குறிப்பிட்ட கருணாஸ், “இந்த அதிகாரம் எவ்வளவு நாட்கள் இருக்கப் போகிறது. மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் பேசுவதைப் பார்த்து சிரிக்கிறார்கள். சாதாரண பாமரனையும் அமைச்சராக உருவாக்கக் கூடிய ஜெயலலிதாவால் நீங்களெல்லாம் ஆளானீர்கள். நான் எப்படி கீழே இருந்து மேலே வந்தேனோ அதுபோலத்தான் அமைச்சர்களும் வந்தனர். நான் போராளி, அரசியல்வாதி அல்ல. தனி அமைப்புடன் தோழமையாக வந்தவன் நான். எனக்கும் அமைச்சர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.

“முக்குலத்தோர் சமுதாயத்தின் இளைஞர்கள் கையை உடைப்பேன், காலை உடைப்பேன் என்று தொடர்ந்து பேசினால், அதற்கு நீதிமன்றம் மூலம் தக்க பதிலடி வாங்கிக் கொடுப்பேன்” என்று எச்சரிக்கை விடுத்த கருணாஸ், நடிகர் சிவாஜி கணேசன் சிலையை சென்னையின் முக்கிய சாலையில் நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018