உட்கட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு!


உறுப்பினர் சீட்டு இருப்பவர்கள் மட்டுமே உட்கட்சித் தேர்தலில் போட்டியிட மற்றும் வாக்களிக்க முடியும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட பின்னர் கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் தொடங்கியது. புதிய உறுப்பினர் சேர்க்கை, பழைய உறுப்பினர்களின் பெயர்களைப் புதுப்பித்தல் ஆகிய பணிகளைக் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி முதல் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இருவரும் இணைந்து இன்று (அக்டோபர் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக உறுப்பினர்கள் தங்களின் பதிவை புதுப்பிக்கும் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் கடந்த 29.1.18 அன்று தொடங்கியது.
1.3.18 முதல் 31.5.18 வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை செலுத்தி, ரசீது பெற்றவர்களுக்கு அக்டோபர் 8ஆம் தேதி முதல் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்படும். 31.5.18க்கு பின்னர் படிவங்களை தாக்கல் செய்தவர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.