மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

நமக்குள் ஒருத்தி: ஊட்டி வளர்க்கப்படும் ஆதிக்க உணர்வு!

நமக்குள் ஒருத்தி: ஊட்டி வளர்க்கப்படும் ஆதிக்க உணர்வு!

நவீனா

குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண், பெண் போட்டி மனப்பான்மை ஒன்றைப் பெற்றோர் திணித்துவிடுகின்றனர். வீட்டில் பெண் பிள்ளை மூன்று இட்லி சாப்பிட்டால் உடனே ஆண் பிள்ளையைப் பார்த்து, 'பொம்பளப் பிள்ள, அவளே மூணு இட்லி சாப்பிடுறா, ஆம்பள பையன் உனக்கு என்ன? இந்தா இன்னொரு இட்லி சேர்த்து சாப்பிடு' என்று உணவில்கூட ஒப்பீடு செய்துகொண்டிருப்பார்கள். இதுவே காலப்போக்கில் பொறாமையாகவும், காழ்ப்புணர்ச்சியாகவும் உருவெடுக்கிறது.

வீட்டில் பெண் குழந்தைகளுக்குப் புது உடை வாங்கித் தரும்போதோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக சலுகை கொடுக்கும் நிலை வரும்போதோ, 'என்ன அவளுக்கு மட்டும்?' என்று பையன்கள் சண்டைக்கு வருவதைக் கடந்து வராத குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இந்த உணர்வே ஆண்களுக்கு ஒரு பெரிய ஆலமரமாக வளர்ந்து, வேர் பரப்பி, விழுதுகள் விட்டு அசைக்க முடியாத காழ்ப்புணர்ச்சியில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. சமூகவெளிக்கு வரும்போது பெண்களைத் தனக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள விடாமல் தடுக்கிறது.

சாலையில் பெண்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதுகூட, அதே சாலையில் அதே போன்ற வாகனங்களை ஓட்டிச் செல்லும் நிறைய ஆண்கள், ஏதாவது ஒருகட்டத்தில் பெண் வாகன ஓட்டிகள் தங்களை முந்திக்கொண்டு போவதைத் தன்மானப் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். ஒரு பெண் வாகனத்தில்கூட தன்னை முந்திச் செல்ல அனுமதிக்காத சமூகம், வாழ்க்கையில் முந்திச்செல்ல எப்படி அனுமதிக்கும்? இதில் ஏற்படும் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்டு விபத்துகளில் முடிந்து விடுவதும், அதனால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நிகழ்வும்கூட இயல்பானதாகிவிட்டது. இப்படித்தான் அடிப்படையில் தனி மனித எண்ணங்கள் சமூகப் பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன.

ஆண்களின் சுய மோகம்

கமலா தாஸ் எழுதிய பெண்ணியக் கவிதைகளில் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான 'த ஓல்டு பிளே ஹவுஸ்' (The Old Play house) என்னும் கவிதையில், குடும்பப் பெண்களின் மனச் சிக்கல்களைத் தெளிவுற எடுத்துக் கூறிவிட்டு, அந்தக் கவிதையின் முடிவில் 'நார்சிசஸ்' என்னும் கிரேக்கப் புராணங்களில் வரும் கதாநாயகனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். வேடனான நார்சிசஸ் மிகவும் அழகானவன். ஒருநாள் காட்டில் வேட்டையாடிவிட்டு அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒரு குளத்திற்குச் சென்று தண்ணீர் குடிப்பான். அப்போது அந்தக் குளத்து நீரில் விழும் தனது பிம்பத்தைப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, அதன் மேல் காதல் வயப்பட்டு, அந்தப் பிம்பத்திற்காக ஏங்கி ஏங்கிக் கடைசியில் உடல் மெலிந்து இறந்துவிடுவான். சுய மோகம் கொள்ளுவது, தனக்குத் தானே அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவை ஒரு கட்டத்தில் மன வியாதியாக மாறிப் போகுமாயின் அதை சைக்காலஜியில் 'நார்சிஸம்' என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஆண்களின் மனதில் ஆணாதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடத்தப்பட்டு ஒரு நிலையில் நாசிஸ எண்ணங்கள் அவர்கள் மனங்களில் தோன்றிவிடுகின்றன. அவர்கள் self love என்று சொல்லப்படும் சுய காதலில் விழுந்துவிடுகிறார்கள். தனக்கு தானே அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவராகவும் மாறிவிடுகிறார்கள். இதை முற்றிலும் சுயநலத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். தனது பிம்பத்தின் மீதும், தனது செயல்கள், வெற்றிகள், சாதனைகள், ரசனைகள் என்று தன்னைத்தானே அதிகம் நேசிக்க ஆரம்பிப்பதால் சுற்றியுள்ள அனைத்தையும் வெறும் பொருளாகவே பார்க்கிறார்கள். அதனால்தான் குடும்பப் பெண்களின் சிறு உலகத்திற்குள் நிகழ்பவை யாவும் அவர்களுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்துவிடுகின்றன.

ஆண்கள் தங்கள் மேல் கொண்ட சுய காதலிலிருந்து வெளியே வரும்போது மட்டுமே பெண்களை முழுமையாகக் காதலிக்க முடியும். அதுவரையில் ஆண் பெண்ணுக்கு இடையிலான காதல் உன்னத நிலையை அடைய முடியாது. ஒவ்வோர் ஆணும் தன்னுள் இருக்கும் நார்சிசஸை உடைத்து எறிய வேண்டும். அந்த மாய பிம்பத்தின் மீது உள்ள காதலைக் கடந்து வர வேண்டும்.

உணவுப் பண்டத்தைச் சமைத்து முடித்த பின், அதைச் சமைக்கப் பயன்படுத்திய பொருள்களைப் பிரித்துப் பார்க்க முடியாதபடி அவை அனைத்தும் இரண்டறக் கலந்து, உணவின் ருசியைக் கூட்டுகின்றன. அதுபோல ஆணும் பெண்ணும் 'நான்' என்கிற தனி எண்ணத்திலிருந்து விடுபட்டு 'நாம்' என்கிற ருசியுள்ள உணவாக மாறும்போது அதிலிருந்து ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்க்க முடியாத, ஒரு உன்னதமான காதல் உருவாகியிருக்கும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்தபடைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி

ஆறாம் பகுதி

ஏழாம் பகுதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

திங்கள், 8 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon