மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 10 அக் 2018

ஆளுநர் வழக்கு: பத்திரிகையின் அனைத்து ஊழியர்களும் சேர்ப்பு!

ஆளுநர் வழக்கு: பத்திரிகையின்  அனைத்து ஊழியர்களும் சேர்ப்பு!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்யவிடாமல் தடுத்த குற்ற வழக்கில் நேற்று (அக்டோபர் 9) காலை கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவால் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டார். கோபால் மீது போடப்பட்ட வழக்கு ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் பிரிவில் வராது என்று நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார்.

இந்த நிலையில்தான் இந்த வழக்கிற்காக போலீஸார் பதிவு செய்த குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருக்கும் பெயர்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், பத்திரிகையாளர்கள் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலில் ஆரம்பித்து அந்த இதழின் பொறுப்பாசிரியர் லெனின், துணையாசியர்களில் தொடங்கி, தமிழகம் முழுக்க இருக்கும் அனைத்து நிருபர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் பணி செய்யும் அதிகாரிகள் முதல் நிர்வாகப் பிரிவின் கீழ் நிலை ஊழியர்கள் வரை சுமார் 35 பேரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இருக்கின்றன.

ஒரு பத்திரிகையின் மீது வழக்கு என்றால் அதன் வெளியீட்டாளர், ஆசிரியர், குறிப்பிட்ட செய்தியை எழுதிய நிருபர் ஆகியோர் மீது வழக்குப் போடுவதுதான் இதுவரையிலான மரபு. ஆனால் ஆளுநர் மாளிகை மூலம் வழங்கப்பட்ட புகாரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்க்கப்படுவது என்பது அதிர்ச்சிகரமானது என்றும் ஆபத்தானது என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த வழக்கு ஒருவேளை ஏற்கப்பட்டு கோபால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகையின் ஒட்டுமொத்த அலுவலர்களும், ஊழியர்களும் கைது செய்யப்ப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ நேர்ந்திருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon