மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: தென்னிந்திய ஊடகங்களில் எடுபடாத பாலியல் புகார்கள்!

சிறப்புக் கட்டுரை: தென்னிந்திய ஊடகங்களில் எடுபடாத பாலியல் புகார்கள்!

எஸ்.செந்தளிர்

இந்தியாவில், அதிரடியாகப் பரவிவரும் மீடூ ஹேஷ்டேக் (#metoo) இயக்கம், தேசிய ஊடகப் பத்திரிகையாளர்கள் மற்றும் பிராந்திய அல்லது வட்டாரப் பத்திரிகையாளர்களுக்கு இடையேயான பரந்த வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. பணிக் கலாச்சாரம், பதில் சொல்லும் பொறுப்புக்கான கட்டமைப்பு, தண்டனையிலிருந்து தப்புதல் போன்றவற்றில் தேசிய ஊடகங்களுக்கும், வட்டார ஊடகங்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் பல வட்டார ஊடகங்களில் பணியாற்றும் பெண்களால், வேலையிடங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்துப் பேச முடிவதில்லை. முறைப்படிப் புகார்களை மட்டுமே அளிக்க முடிகிறதே தவிர வேறெந்த நடவடிக்கையையும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சில அலுவலகங்களில் மட்டுமே பாலியல் வன்முறைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி இருக்கிறது. ஆனால், இவை பெயரளவில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

மூன்று வருடப் போராட்டம்

2003ஆம் ஆண்டு முன்னணித் தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஜெயராணி என்பவர், தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்த சக ஆண் ஊழியர் குறித்துப் புகார் அளிப்பதற்கு யாரை அணுகுவது என்பது தெரியாமல் இருந்தார். இந்தச் சம்பவம் நடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகுதான், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்ற சட்டம் 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை குறித்துப் புகார் அளிக்க விசாகா கமிட்டி அமைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

ஜெயராணி, ஊடகங்களில் பணியாற்றும் பெண்களுக்கான நெட்வொர்க்கை அணுகினார். இந்த நெட்வொர்க், ஜெயராணி பணிபுரியும் ஊடகத்தின் நிறுவனரை அழைத்து, இந்தப் பிரச்சினைக்காகக் குழுவொன்றை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இது தமிழ் மொழி ஊடகத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட விசாகா கமிட்டி. இந்த விசாரணை மூன்று ஆண்டுகளாக நடைபெற்றது என நினைவுகூரும் ஜெயராணி, இது தனது வாழ்வின் "மிக பயங்கரமான காலகட்டம்" என்கிறார்.

தனக்கு எதிரான பாலியல் அத்துமீறல் குறித்து எழுத்துபூர்வமாக புகார் அளிக்கவே ஜெயராணி விரும்பினார். ஆனால், அவர் மேலதிகாரிக்கு வாய்மொழியாகப் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட நபர், அவருக்கு எதிராக எழுத்துபூர்வமாகத் தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தார். அதன்படி, ஜெயராணி உடனடியாகத் துறையை விட்டு வெளியே அனுப்பப்பட்டு, பத்திரிகை சாராத வேலைகளைச் செய்யப் பணிக்கப்பட்டார். தன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டபோது, ஜெயராணி, அந்த நபரிடம் தவறாக நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை எனத் தெரிவித்தனர். அப்படி அவர் நடந்துகொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் தரவில்லை. இதையடுத்துதான், அவர் ஊடகங்களில் பெண்களுக்கான நெட்வொர்க்கை அணுகினார்.

விசாரணை நடந்த மூன்று ஆண்டுகளும் தான் தனிமைப்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்தார் ஜெயராணி. அலுவலகத்தில் யாரும் அவருடன் பேசுவதில்லை. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபர் சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இருந்தார் எனக் கூறினார். “அந்தச் சூழ்நிலை என்னை வேலையை விடும் நிலைக்குத் தள்ளியது. ஆனால், நான் அந்த வழக்கில் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணை சுமுகமாக நடைபெறவில்லை. ஒவ்வொரு வழக்கு விசாரணையிலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். எனக்கு எதிராக அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொய்யான புகார்களைத் திரட்டினர். மொத்த அலுவலகமும் எனக்கு எதிராகத் திரும்பியது. பணியாளர்கள் ஒன்று எனக்கு எதிராகத் திரும்புவார்கள் அல்லது அமைதியாக இருந்துவிடுவார்கள். எனக்குப் பாலியல் தொந்தரவு அளித்தவரின் குற்றத்தை நிரூபிக்க எல்லா ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரை வேலையை விட்டு அனுப்பினார்கள்” என்கிறார் ஜெயராணி.

பணியிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்துப் போராட தைரியம் வேண்டும் என்கிறார் ஜெயராணி. ஏனெனில், இது ஒருவரின் மரியாதை, வேலை பாதுகாப்பு, வருமானம், சமூக உறவு போன்றவற்றை உள்ளடக்கியது. தனக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் குறித்துக் குரலை உயர்த்தும்போது, இவை அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும். அதனால்தான் தமிழ் ஊடகங்களில் பெரும்பாலான பெண்கள் அமைதியாகவே இருந்துவிடுகின்றனர் என்கிறார் ஜெயராணி.

பிரச்சினையை உருவாக்குபவர்

தென்னிந்தியாவில், மிகவும் குறைவாகவே பெண்கள் வட்டாரப் பத்திரிகைகளில் பணிபுரிகிறார்கள். அதைவிடவும் குறைவாகவே அச்சக ஊடகத்தில் பணியாற்றுகின்றனர். இந்தச் சூழ்நிலையே அவர்கள் தங்கள் குறைகளை வெளியே சொல்லுவதைக் கடினமாக்குகிறது. “அவர்களால் தங்கள் கோபத்தைக்கூட வெளிக்காட்ட முடியாது” என்கிறார் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். ஒரு பெண் புகாரை எழுப்பும்போது, பிரச்சினையை உருவாக்குபவர் என்ற முத்திரை அவர் மீது குத்தப்படுகிறது.

பெரும்பாலான நேரங்களில், தனக்கு சக ஊழியர் அல்லது உயரதிகாரி மூலம் பாலியல் வன்முறை நடக்கும்போது, அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை என்கிறார் கவிதா. இது குறித்து அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் அளிப்பதில்லை. இளம் பத்திரிகையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பிரச்சினை என்கிறார் தமிழகத்தில் வானொலி ஒன்றில் பணிபுரியும் ஆர்.பிரியா. “இந்தத் துறையில் எனக்கு 12 வருட அனுபவம் இருந்தாலும், நான் பணிபுரிந்து வந்த இரண்டு தமிழ் செய்தி நிறுவனத்திலும் விசாகா கமிட்டி என்ற ஒன்று இருந்தது எனக்குத் தெரியவில்லை. இது குறித்து அங்கு பணிபுரியும் பெண்களுக்கும் தெரிவிப்பதில்லை” என்கிறார் அவர்.

கன்னட ஊடகத்தில், பெரும்பாலான பெண்கள் கிராம மற்றும் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்தவர்கள். மூத்த பத்திரிகையாளர்கள்கூட இது குறித்துப் பேசுவதில்லை என்பதற்கு இதுவொரு காரணம் என சாரதி சமூகவள ஆதார மையத்தின் தலைவர் சமந்தா கூறுகிறார். இவர், கர்நாடகாவின் பல பகுதிகளில் சமூக வானொலி நிலையங்களை நடத்திவருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிக அனுபவம் இல்லாத பத்திரிகையாளர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்வதற்கு முன்வர வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்கிறார்.

கன்னட ஊடகத்தில் பாலியல் தொல்லை குறித்துப் புகார் அளித்த முதல் பெண் சமந்தா. 1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திரைப்படத் துறை சார் நிருபராக இருந்த அவர் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்தார். இவருடைய புகாரை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான விஜயா என்பவர் கையாண்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு எச்சரிக்கை விடுத்தார். பாலியல் துன்புறுத்தலின் காரணமாக கன்னடச் செய்தித் தாள்களில் பணிபுரிந்த இரண்டு பெண்கள் வேலையை விட்டுச் சென்றனர். இந்தத் துறையில் இந்த நடைமுறை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குவதற்கு இதுவே போதுமானது என்கிறார் சமந்தா.

பாலியல் துன்புறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஆபாசமான சைகைகள் மற்றும் கருத்துகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் அது குறித்த எந்தத் தெளிவான ஆதாரமும் இல்லாதபோது பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் புகார் அளிப்பது கடினமான ஒன்றாக இருந்துவருகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் பத்திரிகையாளரின் பிரச்சினை வித்தியாசமானது. எப்போதும் தன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பிய தன்னுடைய தலைமை அதிகாரி, தனக்கு விடுமுறையே அளிக்க மாட்டார் என்று இவர் குறிப்பிட்டார் (தன்னுடைய பெயரை வெளியிட இவர் விரும்பவில்லை).

இது குறித்துத் துணை ஆசிரியரிடம் புகார் அளித்ததையடுத்து, அந்த நபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மாறுபட்ட விதத்தில் தொல்லை வந்தது. தலைமையகத்திலிருந்து பிராந்திய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இது பதவி இறக்கம் போன்றது. அதன் பிறகு, அந்த நபர், இவர் எழுதிய செய்திக் கட்டுரைகள் அச்சுக்குச் செல்லு முன் அவற்றைத் திருத்தி, அதில் பிழைகளை உருவாக்கி இவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தத் தொடங்கினார். எனவே, தான் அனுப்பிய கட்டுரைகளின் பிரதிகளை அச்சிட்டு எடுத்துவைத்துக் கொள்ளும் வழக்கத்தை இவர் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய கட்டுரைகளில் வரும் பிழைகள் குறித்து ஆசிரியர் கேள்வி கேட்கும்போது, தன்னிடம் இருக்கும் அச்சிட்ட பிரதிகளைக் காண்பித்து, நடந்ததை விளக்குவார்.

எப்படியிருப்பினும், இந்தத் துன்புறுத்தல் மூன்று ஆண்டுகளுக்கு மேலேயும் தொடர்ந்தது. அவருக்கு சம்பள உயர்வோ அல்லது பதவி உயர்வோ அளிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு உள்ளூர் செய்தித்தாள் நிறுவனத்தில் சேர வேண்டியதாயிற்று.

வேலையை விடும் பெண்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் 25 உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இரண்டு பெண் நிருபர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர் என்கிறார் பத்திரிகையாளர் வனஜா. இவர், ஊடகங்களில் பெண்களுக்கான நெட்வொர்க் அமைப்பின் உறுப்பினர். முக்கிய மூன்று செய்தித் தாள்களில் விசாகா கமிட்டி இருந்தது. வேறு பகுதியில் பெண்கள் அணுகுவதற்கு எந்த அமைப்பும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் அனுபவிக்கும் பெண்கள் வேலையை விட்டுச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் வனஜா.

மலையாள ஊடகங்களிலும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. பாரபட்சம் மற்றும் குறிவைத்துத் தாக்கப்படும் பயத்தினால் இளம் பெண் பத்திரிகையாளர்கள் இது குறித்துப் பேசுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர் என்கிறார் ஓபன் என்ற இதழின் இணை ஆசிரியர் ஷாஹினா. உள்ளூர் ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டது. பத்திரிகைத் துறையில் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாலும், கேரளாவில் இந்த எண்ணிக்கை குறைவு. பெண் பத்திரிகையாளர்களின் பிரச்சினைகளை ஆராய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது என்கிறார் ஷாஹினா.

பல மலையாளப் பத்திரிகைகளில் விசாகா கமிட்டி இல்லை என்கிறார் மத்யமம் என்ற தினசரியின் துணை ஆசிரியரும் கேரளப் பத்திரிகையாளர்களின் சங்கத்தின் உறுப்பினருமான ஜிஷா எலிசபெத். ஒரு சில இடங்களில் கமிட்டி இருக்கிறது. ஆனால், அதை எவ்வாறு அணுக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அங்கு பணிபுரியும் பெண்களுக்குச் சொல்லப்படுவதில்லை. எனவே, பாலியல் தொந்தரவுக்கு எதிராகப் புகாரளிப்பது எளிதல்ல. அதுமாதிரி ஒரு புகார் இருந்தால், அதற்குக் காவல் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்கிறார் எலிசபெத்.

புகாரைத் தாக்கல் செய்ய விரும்பும் பெண் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. இதனால், தன்னுடைய தோழிகள் சிலர் புகார் கொடுக்காமல் தவிர்த்துவிட்டு, கடைசியில் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்கள் என எலிசபெத் கூறினார்.

ஒரு பெண் புகாரளித்தால், அவர் தொடர்ந்து ஆபாசக் கருத்துகளைக் கேட்க வேண்டியிருக்கும். தொடர்ந்து அங்கே வேலை செய்ய முடியாது. வதந்திகள் வேகமாகப் பரவிவிடுவதால் வேறு நிறுவனங்களிலும் வேலை பெற முடியாது. தங்களுக்கு எதிராகப் புகார் அளிக்கக்கூடும் என்ற அச்சத்தில் அந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்த எந்தவொரு அமைப்பும் விரும்புவதில்லை என்கிறார் எலிசபெத்.

இதை ஒழுங்குபடுத்துவதற்கு, சட்ட அதிகாரமுள்ள ஒரு மேல்முறையீட்டுக் குழுவை அமைக்க வேண்டும். இதிலுள்ள உறுப்பினர்கள், கார்ப்பரேட் ஊடகங்களினால் எந்த விதத்திலும் தாக்கம் அடையாதவர்களாகவும், மகளிர் நலனுக்காக செயல்படக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். ஊடக நிறுவனங்களுக்கும், பெண் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் செயல்படும் அமைப்பாக இந்தக் குழு இருக்க வேண்டும் என்று எலிசபெத் யோசனை கூறுகிறார்.

நன்றி:ஸ்க்ரோல்.இன்

தமிழில்:சா.வினிதா

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon