மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 13 நவ 2019

ஆற்றில் கழிவுகள்: சாயப்பட்டறைகள் இடிப்பு!

ஆற்றில் கழிவுகள்: சாயப்பட்டறைகள் இடிப்பு!

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுரை பொங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆறு சாயப்பட்டறை ஆலைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

சேலத்தில் பெய்த பெருமழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று (அக்டோபர் 10) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் மலை போல் நுரை பொங்கியது. சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறைகளின் கழிவுகள் ஆற்று நீரில் கலந்துவிட்டதால் இவ்வாறு நடந்துள்ளதாகப் புகார் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள். இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் சாய ஆலைகள் இயங்கி வருகிறதா என்று மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கலரம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, கலரம்பட்டி பகுதியில் உள்ள குமார் என்பவருக்குச் சொந்தமான குமார் சில்க் டையிங், செங்கோடன் என்பவருக்குச் சொந்தமான 3 ஆலைகள், ஜி.கே.கரட்டூர் என்ற இடத்தில் இயங்கி வந்த பிரபு கலர்ஸ் மற்றும் காந்தி டையிங் ஆகிய 6 ஆலைகள் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆலைகளின் கழிவுகள் ஆற்றில் கலந்ததையும் கண்டுபிடித்தனர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள். இதையடுத்து, இந்த ஆறு ஆலைகளும் இன்று இடித்து அகற்றப்பட்டன. அத்துடன், இந்த ஆலைகளுக்கான மின் இணைப்பையும் துண்டித்தனர் அதிகாரிகள்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon