மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 அக் 2019

ஊழல்: மூன்றாவது இடத்தில் தமிழகம்!

ஊழல்: மூன்றாவது இடத்தில் தமிழகம்!

ஊழலில் இந்திய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தி டிரான்பரன்சி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியக் கிளை இந்தியாவில் உள்ள 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊழல் தொடர்பான ஆய்வை நடத்தியது. 15 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் எதிர்கொண்ட ஊழல் அனுபவங்கள் குறித்து ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைகளைப் பெற்றது.

அவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில், ஆய்வில் பங்கேற்ற 59 சதவிகிதம் பேர் தங்களின் பணி முடியவேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். பஞ்சாப்பில் இது 56 சதவிகிதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்திலிருந்து இதில் பங்கேற்றவர்களில் 52% பேர் அரசு சேவையைப் பெற கையூட்டு தர வேண்டியிருந்ததாக கூறியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. அலுவலகங்கள் கணினிமயமாக்கல் செய்யப்பட்டது ஊழல்களைக் குறைப்பதற்கு உதவவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தாங்கள் லஞ்சம் வழங்கும் அரசு தாங்கள் லஞ்சம் வழங்கும் அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டவையாக இருந்தாலும் அங்கு சிசிடிவி இல்லை என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர். காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்குவது கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவது அதிகரித்துள்ளது.

லஞ்சம் தந்தால் தான் தங்கள் பணிகள் நடைபெறுவதாக 22 சதவிகிதம் பேரும் தங்கள் பணிகள் வேகமாக நடைபெறுவதற்கு லஞ்சம் அளிப்பதாக 36 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ஊழல் பட்டியலில் தமிழகம் 3ஆவது இடம் பிடித்திருப்பது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44% ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக 17% ஊழல் காவல்துறையிலும், 15% ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25% ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஊழல்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமல்ல. இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாக இல்லாதது தான். அவர்களைப் பார்த்தும், அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மற்றும் நெருக்கடிகளுக்கு பணிந்தும் தான் பெரும்பான்மையான அதிகாரிகளும் ஊழல்வாதிகளாக மாறுகின்றனர். இதற்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஆதாரமும் இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி உதவி பெறுவதற்கு தேவையான சான்றுகளை வழங்கவும், கணவர் மறைந்த நிலையில் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற தாய் அவருக்கான அரசு உதவித் தொகையை பெறுவதற்கு தேவையான சான்றுகளைக் கொடுக்கவும் கையூட்டு வாங்குவதை விட மிகக்கொடூரமான குற்றம் எதுவும் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றிச் செயல்படுத்துவது தான். சாதிச்சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு வழங்குதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை இந்த சட்டத்தின் மூலம் பெறமுடியும். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப்படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ்களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon