மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

நமக்குள் ஒருத்தி: குழந்தை வளர்ப்பு யாருடைய பொறுப்பு?

நமக்குள் ஒருத்தி: குழந்தை வளர்ப்பு யாருடைய பொறுப்பு?

நவீனா

நாளிதழ் செய்திகளில், பெண்களின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டும் நிகழ்வுகளை அன்றாடம் கடந்து வந்துகொண்டிருக்கிறோம். கணவருடன் ஏற்படும் பிரச்சினைகளால் தற்கொலை முடிவை எடுக்கும் பெண்களும், திருமணத்திற்கு அப்பாற்பட்டுப் பிற ஆண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களும் அவர்களின் முடிவுகளில் குழந்தைகளையே மையப்படுத்துகிறார்கள். தற்கொலை முடிவை எடுக்கும் பெண்களில் சிலர், இறக்கும் முன்னர் தங்கள் குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிடுகின்றனர். கணவருடனான திருமண உறவை முறித்துக்கொண்டு, வேறு எவரையாவது திருமணம் செய்ய முடிவெடுக்கும் பெண்களும், குழந்தை என்கிற பந்தத்தைக் கடந்து வர முடியாமல் குழந்தைகளைக் கொல்ல முடிவு செய்யும் பயங்கரங்கள் நிகழ்வதையும் பார்த்துவருகிறோம்.

இன்னொரு புறம் குழந்தை பிறக்கவில்லை என்று அதற்காக சிகிச்சைகள் செய்தும் பயனின்றித் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களையும், அவ்வாறான சிகிச்சைகளின் பக்க விளைவாக வரும் வியாதிகளினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களையும் காண்கின்றோம்.

மேற்கூறிய அத்தனை நிகழ்விலும் சமூகம் பெண்களைக் குறை கூறிவிட்டுச் சட்டென நகர்ந்து தனது அடுத்த அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. பெண்கள் பற்றியும், தாய்மை பற்றியும் பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கிய சமூகம், அதனால் ஏற்படவிருக்கும் பின் விளைவுகளைப் பற்றியும் முன்பே ஆராய்ந்து அறிந்திருந்தால், இவ்வாறான விபரீதங்கள் நிகழ்வதைத் தடுக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.

குழந்தை என்கிற அம்சத்தை இயற்கையும் சரி, சமூகமும் சரி, மிக நெருக்கமான பிணைப்புகளுடன், பெண்களுடனேயே இறுகக் கட்டி வைத்திருக்கின்றன. திருமணத்திற்குப் பின் குழந்தை பிறக்கவில்லை என்றால், 'என்னம்மா, கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது, இன்னுமா உன்னோட வயித்துல புழு பூச்சி தங்கல?' என்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இதுவே சில வருடங்கள் கடந்துவிட்டால், 'மலடி' என்கிற பட்டம் கட்டி, பொது காரியங்களிலிருந்தும், சுப காரியங்களிலிருந்தும், அந்தப் பெண்ணை ஒதுக்கிவைக்க ஆரம்பித்துவிடுகின்றனர். குழந்தைகளைப் பெற்ற பெண்களையோ, 'மக்களைப் பெற்ற மகராசி, மங்கையர்க்கரசி' என்றெல்லாம் புகழ்கின்றனர்.

இவ்வாறான பொதுக் கருத்துகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து பெண்களின் மனதில் குழந்தை தனக்கு மட்டுமே சொந்தமானது, குழந்தையின் பொருட்டு வரவிருக்கும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்துக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது. சமூகமும், 'என்ன புள்ள வளத்து வெச்சிருக்கா பாரு! உங்க அம்மா உனக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்கலையா?' என்று குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் தாய்மார்களைக் குறை கூறுகிறது.

'நல்லதங்காள்' கதையில் ஆரம்பித்து இன்றுவரை நடந்தேறிக்கொண்டிருக்கும் குழந்தைகளைக் கொல்லும் தாய்மாரின் கதைகளுக்கு ஒருவகையில் காரணமாக இருப்பது, குழந்தைகளைக் கவனித்தல் என்னும் கடமையை முற்றிலும் பெண்களோடு மட்டும் முடிந்து வைத்திருப்பதேயாகும். 'புச்சி எமசேட்டா' என்னும் நைஜீரிய நாவலாசிரியர் எழுதிய 'த ஜாய்ஸ் ஆப் மதர்ஹூட்' (The Joys of Motherhood) என்கிற நாவலில் மேற்சொன்ன சமூகப் பின்னணியின் தழுவல் இருக்கும். ஐந்து குழந்தைகளுக்குத் தாயான கதாநாயகிக்கு, எந்த விதத்திலும் குடும்ப பொறுப்பில் பங்கெடுத்துக்கொள்ளாத ஒரு கணவன் வாய்த்திருப்பான். கதாநாயகன் குடும்ப உறுப்பினர்களுக்கு சல்லிக்காசுகூட அனுப்பாத நிலையில் பட்டினி கிடந்து, ஐந்து பிள்ளைகளையும் நல்ல முறையில் படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்துவாள் தாய். இரவு பகல் பாராது அயராமல் உழைப்பாள். ஊரில் உள்ளவர்கள் அவளைப் பார்த்து, 'தாய்மையின் சிறப்பு தியாகம்தான். உன் பிள்ளைகள் வளர்ந்து உன்னை மகாராணி போல வைத்து அழகு பார்ப்பார்கள்', என்றெல்லாம் கூறி உவகை கொள்ளுவார்கள். தனது தாய்மையின், தியாகத்தின் கனிகளைச் சுவைக்க அந்தத் தாயும் காத்திருப்பாள்.

வருடங்கள் ஓடிவிடும். குழந்தைகள் நல்ல வேலையில் வெளிநாட்டில் குடியேறிவிடுவார்கள். அந்த தாயைப் பார்த்துக்கொள்ள யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவளோ, ஊர் தெருவில், இன்னும் பட்டினியாக அமர்ந்துகொண்டு, மூதாட்டிகளுடன் மூதாட்டியாக தன் குழந்தைகளைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருப்பாள். ஒருநாள் தெருவில் யாருமற்ற அநாதையாக இறந்தும்விடுவாள். 'தாய்மையினால் அவள் அடைந்த பயன் தான் என்ன?' என்கிற கேள்வியோடு எமசேட்டாவின் அந்த நாவல் முடிந்திருக்கும்.

ஆங்கிலத்தில் ஃபாதர்ஹூட் (Fatherhood) என்பதுபோல் தமிழிலும் 'தந்தைமை' என்றொரு சொல் தேவைப்படுகிறது. குழந்தை மீதான பொறுப்பு தாய் தந்தை இருவருக்கும் பொதுவானது எனச் சமூகம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கும் தாய்க்குமான பந்தத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரிக்க அவ்வகை புரிதல் மிகவும் அவசியம். இது குழந்தை, குடும்பம் போன்றவற்றைத் தாண்டி சமூக நலனை தூக்கிப் பிடிக்கவும், பாசம், பண்பு, கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படை ஆதாரமாகவும் அமைந்துவிடும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்தபடைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி

ஆறாம் பகுதி

ஏழாம் பகுதி

எட்டாம் பகுதி

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon