மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஆயுஷ்மான் திட்டம்: 1.7 கோடி மக்கள் பயன்!

ஆயுஷ்மான் திட்டம்: 1.7 கோடி மக்கள் பயன்!

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.7 கோடி குடும்பத்தினர் பயனடைவர் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 11) மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தைச் சார்ந்த மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், சென்னையில் ஒரு பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில், மருத்துவர் செல்வவிநாயகம் கலந்துகொண்டார். இது குறித்துப் பேசுகையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதற்குத் தனியாக அடையாள அட்டை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார் செல்வவிநாயகம்.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையையே இதற்கும் பயன்படுத்தலாம் என்றும், ஆதார் அடையாள அட்டையையும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். “தமிழகத்தில் உள்ள 600 தனியார் மருத்துவமனைகள், 250க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். இதன்மூலம், சுமார் 1,500 வகையான சிகிச்சைகளைப் பெற முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

மண்டல மக்கள் தொடர்பு அலுவலகங்களின் கூடுதல் தலைமை இயக்குநர் ஈ.மாரியப்பன் பேசுகையில், தமிழக அரசின் சுகாதாரத் துறையும், மத்திய அரசும் கூட்டாக இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார். “இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 77 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயனடையும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, ஏற்கனவே முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் 1.7 கோடி ஏழைக் குடும்பங்களும் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் பயன் பெறும்” என்று கூறினார். இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கு வயது வரம்பு கிடையாது என்றும் தெரிவித்தார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon