2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூன்று சிலைகள் மாயமானது தொடர்பாக, நேற்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், 2004ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காகப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கோயிலில் இருந்த புன்னைவன நாதர், ராகு மற்றும் கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாகக் கூறி, அவை மாற்றப்பட்டன. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூன்று சிலைகளும் இரவோடு இரவாக மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தச் சிலைகள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டதாகவும், பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 11) மீண்டும் அக்கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மூன்று சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக, டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நேற்று நீட்டிப்பு செய்தது நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு. இதனையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கபாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.