மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: சைவமா, அசைவமா?

சிறப்புக் கட்டுரை: சைவமா, அசைவமா?

சேது ராமலிங்கம்

சாதி, மதம் என விரியும் உணவு அரசியல் குறித்த அலசல்!

பாஜக ஆட்சியேறியவுடன் பண்பாட்டு ஒருமைவாதத்தைத் தொடங்கியது. இந்தியா முழுமையும் ஒரே மொழி, ஒரே மதம், உடைகளுக்கான கட்டுப்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இல்லாத கருத்திலும் சிந்தனையிலும் ஒருமைவாதம் இத்துடன் உணவு விஷயத்திலும் தலையிடத் தொடங்கி மக்களின் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் நசுக்கத் தொடங்கியது.

உணவு உரிமை மனித உரிமையே

உலக நாடுகளில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு குடிமகன் தான் விரும்பிய உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமையானது இந்தியாவில்தான் நசுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே என்றும் இல்லாத அளவு அசைவ உணவுகள் மீது குறிப்பாக மாட்டிறைச்சி மீது வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களும் மாடுகளை ஓட்டிச் செல்பவர்களும் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தச் சம்பவங்களில் கும்பல் படுகொலைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், மாட்டிறைச்சிக் கடை வைத்திருப்பவர்களும் உண்பவர்களும் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

பாஜக மேற்கொண்டு வரும் உணவு அரசியலில் உடல்ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம் இருக்க, அசைவ உணவு உண்பவர்கள் குறைந்து வருகிறார்கள் என்றும் சைவ உணவை விரும்புகிறவர்கள் அதிகமாகி வருகிறார்கள் என்றும் ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு புறம் அசைவ உணவு உண்பவர்கள் வன்முறையாளர்களாக மாறுவார்கள் என்ற அதிர்ச்சி தரக்கூடிய ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

உணவும் சாதியும்

இந்தியாவில் மற்ற நாடுகளைப் போலன்றி உணவானது சாதியக் கட்டுமானத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் உயர் சாதியினராகவும் ஆட்டிறைச்சி உண்பவர்கள் பெரும்பாலும் இடைநிலைச் சாதியினராகவும் சிறுபான்மையினராகவும் மாட்டிறைச்சி உண்பவர்கள் இஸ்லாமியராகவும் கிறிஸ்துவர்களாகவும் தலித் மக்களாகவும் உள்ளனர். இதிலும் கிறிஸ்துவர்களில் மாட்டிறைச்சி உண்ணாதவர்களும் உண்டு. ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களில் மாட்டிறைச்சியை உண்பவர்கள் தங்களது வீடுகளில் சமைக்கும் மனநிலையைப் பெற்றுவிடாமல் இன்னும் தடுப்பது சாதிய மனநிலையே.

இதற்கு அடுத்த கட்டமாக சாதியப்படி நிலையில் அடித்தளத்திலுள்ள விளிம்பு நிலை சாதியினர் கிறிஸ்துவர்களில் ஒரு சில பகுதியினர் மட்டும் உண்ணும் உணவாகவே பன்றி இறைச்சி நீடிக்கிறது. பன்றி இறைச்சி உண்பவர்களை இன்னும் தாழ்வானவர்களாகவே பார்க்கும் சாதிய மனநிலை இறுகிப்போய் உள்ளது. ஆனால், மீன் அனைவராலும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது (மேற்கு வங்கத்திலுள்ள காயஸ்த பிராமணரும் மீன்களை விரும்பி சாப்பிடுகின்றனர்).

கடின உழைப்புக்கு இறைச்சி உணவு அவசியம்

கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்குப் புரதச் சத்து அவசியமாகத் தேவைப்படுகிறது. இந்த புரதச் சத்தானது சுண்டல் உள்ளிட்ட சில பயிறு மற்றும் தானிய வகைகளிலும் சில காய்கறிகளிலும் கிடைத்தாலும் நடுத்தர மக்களும் ஏழைகளும் பொருளாதாரத்தில் அதையும் விட கீழ்நிலையில் உள்ள விளிம்புநிலை மக்களும் இவற்றையெல்லாம் வாங்க முடியாது. அவர்களின் கடினமான உடல் உழைப்புக்குத் தேவையான புரதச் சத்தை இறைச்சி மற்றும் மீன் உணவே தருகின்றன. ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் இவர்கள் அசைவ உணவுகளை விட்டுவிட்டு திடீரென்று சைவ உணவுக்கு மாறினால் மிகவும் பலவீனமாகி, கடினமான வேலை செய்ய முடியாமல் போய்விடுவதோடு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும் என்பதுதான் மருத்துவ உண்மை.

இந்த உண்மைகளைப் புறந்தள்ளி விட்டு பாஜக திணித்துவரும் சைவ உணவுப் பிரச்சாரங்கள் எடுபடாது. அவை தோல்வியையே அடையும். முக்கியமாக நாடு முழுவதும் சைவ உணவுக்கான விருப்பம் அதிகரித்துவருவதாகக் கூறும் பிரச்சாரங்கள் பொய்யானவை என்பதைச் சமீபத்தில் மின்ட் என்ற பொருளாதார நாளிதழின் ஆய்வு நிரூபிக்கிறது.

ஆய்வில் நிரூபணமான உண்மை

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நிறுவனம் 2005-2006 மற்றும் 2015-2016 ஆண்டுகளில் மேற்கொண்ட சர்வேயில் கிடைத்த தகவல்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளின்படி சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மாநிலங்களை விட மிக அதிக அளவில் டெல்லியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் முன்னதாக இறைச்சி உண்பவரகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

தென்னிந்திய மாநிலங்களில் கா்நாடாகாவில்தான் இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் இறைச்சியுடன் மீனும் முட்டை உண்பவர்களும் அதிகரித்துள்ளனர். அதேசமயத்தில் ஹரியானாவில் மிக அதிகமான அளவில் (11.1 விழுக்காடு) சைவ உணவு உண்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆண்களைவிடப் பெண்கள் அதிகம்

ஆய்வில் முக்கிய விஷயம் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பவர்களின் எண்ணிக்கை ஆண்களைவிட பெண்களின் மத்தியில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 2015-16இல் 22 விழுக்காடு ஆண்கள் சைவ உணவு உண்பவர்களாகவும் பெண்கள் 30 விழுக்காடாகவும் இருந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், இறைச்சி உண்ணும் ஆண்களோடு பெண்களும் போட்டி போட்டு முன்னேறியுள்ளனர். இது ஆரோக்கியமான போக்காகும். ஏனெனில் பெண்கள் புரதச் சத்துள்ள உணவை உண்பது எதிர்காலத் தலைமுறையை வலிமை உள்ளவர்களாக மாற்றும்.

இந்த ஆய்வில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முட்டை, இறைச்சி மற்றும் மீன்களின் விலை உயர்ந்தாலும் அவற்றை நுகர்வோரின் எண்ணிக்கை குறையவில்லை என்பதுதான். இந்திய நடுத்தர மக்களின் வருமான உயர்வு, அவர்கள் சுவையான உணவுத் தேர்வையும் புரதச் சத்து மிகுந்த உணவை நாடிச் செல்வதற்குக் காரணமாக இருந்துள்ளது. ஏழை மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் முட்டையைச் சார்ந்து இருப்பதே அவர்களின் புரதச் சத்து தேவையைத் தீர்ப்பதாக அமைந்துள்ளது என்று ஆய்வு விவரங்கள் தெரிவித்துள்ளன.

சாதிகள் மற்றும் மதரீதியாக பார்க்கும்போது முஸ்லிம்கள், தலித் மற்றும் பழங்குடியினர் மத்தியில் 80 விழுக்காட்டுக்கு மேலாக இறைச்சி உண்பவர்கள் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. உயர் சாதியினர் உள்ளிட்ட பொது வகுப்பில் அசைவ உணவு உண்பவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.

பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் இறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகமான அளவில் (3 விழுக்காடு) அதிகரித்துள்ளது. மொத்தத்தில் ஆய்வு சாராம்சமாக சாதி, பகுதி மற்றும் மத அடிப்படையில் உணவுப் பழக்கம் மாறுபடுகிறது என்பதை வலியுறுத்துகிறது.

இந்த ஆய்வு உணர்த்தும் உண்மை இதுதான். இந்தியாவில் எங்கும் சைவ உணவு அதிகரித்ததற்காக ஆதாரங்கள் இல்லை என்பதுதான்.

அதிர்ச்சியான ஆய்வு

அசைவ உணவு உண்பவர்கள் வன்முறையாளர்களாக மாறுவார்கள் என்று பொய்யான ஆய்வுகளையும் ஆர்எஸ்எஸ் – பாஜகவைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியக் குழந்தைகளுக்கான மருத்துவ இதழில் (Indian Journal of Peadiatrics — டிசம்பர் 14,2017 ஆன்லைன் பதிப்பு) அசைவ உணவு உண்ணும் குழந்தைகள் வன்முறையாளர்களாக எதிர்காலத்தில் மாறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதை எழுதியவர்கள் மருத்துவர்கள். எந்த அறிவியல் அடிப்படையுமின்றி ஆதாரமும் இன்றி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இக்கருத்தின் அடிப்படையே ஆர்எஸ்எஸ் – பாஜகவின் இந்துத்துவச் சிந்ததாந்தமாகும். இதன்படி பார்த்தால் இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் வெளிநாட்டவர்கள் அனைவரும் வன்முறையாளர்களே. இது அடிப்படையிலேயே முட்டாள்தனம் மட்டுமல்ல; ஆபத்தானது ஆகும். ஏனெனில் இக்கருத்தின் அடிப்படையில் இறைச்சி உண்ணும் குழந்தைகள் (குறிப்பாக தலித் மற்றும் சிறுபான்மையினரின் குழந்தைகள்) பள்ளியில் பாகுபாடாக நடத்தப்படுவார்கள் என்ற அபாயமும் உள்ளது. இக்கருத்தியலை மக்களுக்கான மனநல மருத்துவர் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டித்துள்ளது. அது மருத்துவ ஆய்வு இதழில் அபத்தமான கட்டுரையை திணிப்பதோடு மருத்துவ அறிவியலையே கேவலப்படுத்துவதாகும் என்றும், பாசிச சித்தாந்தத்தை மருத்துவ இதழில் பரப்புவதாகும் என்றும் கூறிக் கண்டனம் தெரிவித்துள்ளது.

அசைவ உணவுக்கும் வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலக வரலாற்றில் பாசிஸ்ட்டுகளாக இருந்த ஹிட்லர் ஒரு சைவ உணவுப் பிரியர்தான். அசைவ உணவு பூமியில் மனிதகுலம் உருவானதிலிருந்தே உண்ணப்படும் உணவாகும். ஒருவர் தனக்கு விரும்பும் உணவைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரின் அடிப்படை மனித உரிமை. இந்துத்துவ உயர் சாதிய அடிப்படையிலான உணவு வகைகளை மக்கள் மீது திணிப்பதும் அதற்காக பொய்ப் பிரச்சாரங்களையும், ஆய்வு என்ற பெயரில் கட்டுக்கதைகளையும் திணிப்பது பண்பாட்டு பாசிசம். அது தோல்வியையே தழுவும்.

ஆதாரங்கள்:

1. Mint,October 9, 2018.

2. Indian Journal of Peadiatrics - டிசம்பர் 14, 2017 ஆன்லைன் பதிப்பு.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon