மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு: ஆட்சியர்கள் ஆஜர்!

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு: ஆட்சியர்கள் ஆஜர்!

மின்னம்பலம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் மதுரை, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று நேரில் ஆஜராகினர்.

மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். "மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளைப் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது. தண்ணீர் முறையாகச் செல்லாததால், மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே, மதுரையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் திருப்பரங்குன்றம், மேலமடை, தென்கரை உள்ளிட்ட 10 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்தது நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு. இது தொடர்பாக, ஐந்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும், அதற்காக அவர்கள் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தனர்.

நேற்று (அக்டோபர் 11) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆட்சியர் நடராஜன், தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், திண்டுக்கல் ஆட்சியர் வினய், ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ், சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன்ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராகினர். நீர்நிலை, நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

மதுரை மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon