மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

குட்கா: எஸ்பியிடம் சிபிஐ விசாரணை!

குட்கா: எஸ்பியிடம் சிபிஐ விசாரணை!

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

குட்கா ஊழல் தொடர்பாக கடந்த மாதம் 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உள்ளிட்டோரும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையும் நடத்தியுள்ளனர்.

தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விளக்கமளித்த முன்னாள் ஆணையர் ஜார்ஜ், குட்கா விவகாரம் நிகழ்ந்த சமயத்தில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். “துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்தேன். சட்டவிரோத செயல்கள் குறித்து அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார். அவரின் நடவடிக்கைகள் நம்பிக்கைக்குரியதாக இருந்ததில்லை. அவர் மிகவும் மோசமாகச் செயல்படுவதாக ஏற்கெனவே அறிக்கை அளித்தேன்” என்றும் தெரிவித்தார். தற்போது விழுப்புரம் எஸ்பியாக பணியாற்றிவரும் ஜெயக்குமார் இதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.

இதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த அக்டோபர் 11ஆம் தேதி ஆஜராக வேண்டுமென எஸ்பி ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று (அக்டோபர் 11) சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ஜெயக்குமாரை, ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அவரிடம் குட்கா ஊழல் நடந்த சமயத்தில் குடோனில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எஸ்பி ஜெயக்குமார் மீது முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்த நிலையில், ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon