மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 அக் 2018

எம்ஜிஆர் சிகிச்சை: அப்போலோ டு அமெரிக்கா நடந்தது என்ன?

எம்ஜிஆர் சிகிச்சை: அப்போலோ டு அமெரிக்கா நடந்தது என்ன?

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகம் ஆணையம், 34 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை வழங்க வேண்டும்; எம்ஜிஆரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல ஏன் முடிவெடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஆணையத்தின் இந்தக் கேள்வி, எம்ஜிஆரின் சிகிச்சை தொடர்பான விவரங்களை மீண்டும் விவாதப்படுத்தவும், அப்போதைய அரசியல் சூழல்களை நினைவுகூரவும் ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளது.

1984ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எம்ஜிஆர் அப்போலோவில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டது முதல் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இந்தியா திரும்பி தமிழகத்தில் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றது வரையிலான ஃப்ளாஷ்பேக் விவரங்கள் இதோ...

1984 ஜூன் மாதம் மும்பை ஜாஸ்லோக் மருத்துவமனை மருத்துவரும் நரம்பியல் வல்லுநருமான எம்.கே.மணிக்கு எம்ஜிஆர் அழைப்பு விடுத்தார். 1975ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்துக்குப் பின் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு சிகிச்சை அளித்தவர் டாக்டர் மணி. தம்முடைய சிறுநீரக பிரச்சினைக்காக டாக்டர் மணியை எம்ஜிஆர் வரவழைத்திருந்தார்.

1984 அக்டோபர் 5ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, எம்ஜிஆருக்கு காய்ச்சல், சளி மற்றும் லேசான ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அப்போலோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை எம்ஜிஆர் உடல்நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டபடி இருந்தது. அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே உள்ளிட்டோர் ஊடகங்களைச் சந்தித்து விளக்கமும் அளித்து வந்தார்.

1984 அக்டோபரில் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.வி.சித்தன், எம்ஜிஆர் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த நிதி அமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன், எம்ஜிஆருக்குச் சுவாசப் பிரச்சினை இருப்பதாகவும் சென்னை பொது மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் எம்ஜிஆருக்கு சிறுநீரகப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டசபை கூட்டம் அப்போது நடைபெற்றதால் எம்ஜிஆர் உடல்நிலை குறித்து நாள்தோறும் விவரங்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

1984 அக்டோபர் 13ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் உடல்நிலை தேறிவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அன்று நள்ளிரவு எம்ஜிஆருக்கு பக்கவாதம் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்த ஹண்டே, ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் ஆகியோர் ஆலோசனை நடத்தி எம்ஜிஆரின் உடல்நிலை பாதிப்பு குறித்தும் அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதையும் வெளிப்படுத்தினர்.

1984 அக்டோபர் 15 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று எம்ஜிஆர் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து முரசொலியில் ‘நானும் கூட பிரார்த்திக்கிறேன்’ என எம்ஜிஆர் உடல்நலம் தேற வேண்டும் எனக் கட்டுரை எழுதினார்.

1984 அக்டோபர் 16ஆம் தேதி பிரதமராக இருந்த இந்திரா காந்தி சென்னை வருகை தந்து எம்ஜிஆர் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது எம்ஜிஆரைத் தாம் சந்தித்ததாகவும் அவர் புன்னகைத்தார் எனவும் எம்ஜிஆரின் உடல்நிலையைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் எனவும் கூறியிருந்தார். இந்திரா காந்தியைச் சென்னைக்கு அப்போது வரவழைத்தவர் சிவாஜி கணேசன். இந்திராவின் தனிச் செயலாளர் ஆர்.கே.தவானிடம் எம்ஜிஆர் உடல்நிலை குறித்து இந்திரா காந்தி சென்னை வர வேண்டியதன் அவசியத்தை விவரித்திருந்தார் சிவாஜி கணேசன். அப்போது அமெரிக்க மருத்துவர்கள் வருகை குறித்து மும்பை டாக்டர் மணி கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்,

1984 அக்டோபர் 17, 18 தேதிகளில் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட எலி ப்ரெட்மான், ஜான் மேயெர், கிறிஸ்டோபர் ப்ளாக் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு எம்ஜிஆருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மருத்துவர்கள், “எம்ஜிஆர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்றனர். ஆனால், அப்போலோ நிர்வாகத்துக்கு அமெரிக்க மருத்துவர்கள் வருகை தந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்க மருத்துவர்கள் சிகிச்சை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது; அவர்களை யார் அழைத்து வந்தார்கள் எனத் தெரியாது எனவும் அப்போலோ ரெட்டி கூறியிருந்தார்.

1984 அக்டோபர் 19ஆம் தேதி அமைச்சர்கள் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ.கிருஷ்ணசாமி, ஆர்.எம்.வீரப்பன் ஆளுநர் குரானாவைச் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் இலாகாக்களை நெடுஞ்செழியன் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்தது.

1984 அக்டோபர் 20, 22 தேதிகளில் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர் காணு உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவர்கள் குழு, எம்ஜிஆரின் மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைவுக்கான சிகிச்சையை அளித்தனர்.

1984 நவம்பர் 5ஆம் தேதி எம்ஜிஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எம்ஜிஆருடன் ஜானகி அம்மையார், ஹண்டே உட்பட 21 பேர் தனி விமானத்தில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்றனர். அமெரிக்காவில் எம்ஜிஆருக்கு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தவர் தொழிலதிபர் பழனி ஜி. பெரியசாமி.

1984 நவம்பர் 15ஆம் தேதி எம்ஜிஆர் உடல்நலம் குறித்து திமுகவின் செயற்குழு கூட்டம் கேள்வி எழுப்பியது. மேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதியை திமுக எம்.பி.க்கள் குழு சந்தித்து முறையிடும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தமிழக சட்டசபைக் கலைக்கப்பட்டு லோக்சபா பொதுத்தேர்தலுடன் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

1984 நவம்பர் 23ஆம் தேதி ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் எம்ஜிஆர். நியூயார்க்கில் இந்திய தூதராக இருந்த அருண் பட்வர்த்தன் முன்னிலையில் அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் எம்ஜிஆரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால், திமுக இதனைக் கடுமையாக விமர்சித்தது. எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1984 டிசம்பர் 6ஆம் தேதி அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் படங்களை ஆர்.எம். வீரப்பன் வெளியிட்டார்.

1984 டிசம்பர் 24ஆம் தேதி தமிழகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1985 பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகம் திரும்பினார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

1985 பிப்ரவரி 10ஆம் தேதி மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார் எம்ஜிஆர்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 அக் 2018