மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 25 அக் 2020

ராகுல் பொய் சொல்கிறார்: பாஜக!

ராகுல் பொய் சொல்கிறார்: பாஜக!

தேர்தல் பிரச்சாரங்களின்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் பொய் சொல்லி வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேஷ், தெலங்கானா உட்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரசும் பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தானில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, “மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது, ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை முதல்வர் வசுந்தரா ராஜே அறிவிக்கவில்லை. ஆனால், தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும்போது, இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்குமுன் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.70 ஆயிரம் கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், இப்போதுள்ள மோடி அரசு ரூ.3.50 லட்சம் கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்தது” என்று கூறியிருந்தார். பாஜக அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது என்றும் கூறியிருந்தார். ரஃபேல் ஊழல் தொடர்பாக நேற்று டெல்லியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ஊழல்வாதி என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ராகுல் தேர்தல் பிரச்சாரங்களின்போது, மக்களிடம் பொய் சொல்லி வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ள ஜவடேகர் பொய்யை உரக்கச் சொன்னால் உண்மையாகாது. பொய் என்றும் பொய்தான் எனக் கூறியுள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற நாரி சக்தி சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ராகுல் காந்தி புதிய மந்திரத்தைப் படித்துள்ளார். பொய்யை உரக்கச் சொன்னால் அது உண்மை போல் தோன்றும் என்று ராகுல் காந்திக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்குச் சரியாக கற்பிக்கப்படவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் ராஜஸ்தானில் மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும். பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை (லோக் சபா), வரவிருக்கும் காலங்களில் அதிகரிக்கும். வசுந்தரா ராஜே மீண்டும் ராஜஸ்தானில் முதலமைச்சராகப் பதவி ஏற்பார். சிறந்த ஆட்சிக்கு முக்கிய மந்திரி ஜல் ஸ்வலம்பன் அபியன் மற்றும் பாமாஷா போன்ற திட்டங்கள் நல்ல உதாரணம். இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி நாட்டில் உள்ள பெண்களுக்குப் பிரதமர் உதவி செய்துள்ளார்” என்று ஜவடேகர் கூறியுள்ளார்.

இதுபோன்று, ரஃபேல் விவகாரத்தில் ராகுல் பொய் பேசுகிறார் என்று ஜவடேகர் குற்றச்சாட்டையே முன்வைத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பட்ரா, ரஃபேல் விவகாரத்தில் தேசிய பாதுகாப்பை அவர் கேலிக்கூத்தாக்கி வருகிறார். மொத்த காந்தி குடும்பமே ஊழல்வாதிகள். அவர்கள் அடுத்தவர்களைக் கைகாட்டுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் அனைத்து தகவல்களும் இருப்பதாகக் கூறிவரும் ராகுல் ஏன் இன்னும் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை எனவும் பட்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, பிரதமர் மோடி ஊழல் செய்துள்ளார் என்று கூறியதாக ராகுல் கூறுகிறார், ஹாலண்டே எந்த இடத்தில் இவ்வாறு பேசினார் என்பதை வெளியிடுமாறு ராகுலுக்குச் சவால் விடுத்துள்ளார் பட்ரா.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon