மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ஆக்கிரமிப்பு அகற்றம்: 5 பேர் தீக்குளிக்க முயற்சி!

ஆக்கிரமிப்பு அகற்றம்: 5 பேர் தீக்குளிக்க முயற்சி!

சென்னை அம்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 பேர் தீக்குளிக்க முயன்றனர். தற்கொலைக்கு முயன்றவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 குடும்பங்கள் 25 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சுமார் 589 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை இடித்து அகற்றப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அங்குள்ள மக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். "அருகில் உள்ள பள்ளியில் எங்களுடைய குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில், நாங்கள் வேலை செய்து வருகிறோம். இந்தப் பகுதியில் இருந்து எங்களை அகற்றினால், எங்களுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்" என்று கூறினர் அப்பகுதி மக்கள். வீடுகளை இடிக்கத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 12) காலை அம்பத்தூர் பகுதிக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களுடன் வீடுகளை இடிக்கும் பணியைத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், ஜேசிபி உள்ளிட்ட எந்திரங்களை அடித்து நொறுக்கினர். தங்களது குழந்தைகளுடன் 5 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளித்த குணசேகரன் என்பவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அம்பத்தூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon