மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ரயில்களில் தானியங்கிக் கதவுகள்: அறிக்கை தாக்கல்!

ரயில்களில் தானியங்கிக் கதவுகள்: அறிக்கை தாக்கல்!

சென்னை புறநகர் மற்றும் பறக்கும் ரயில்களில் தானியங்கிக் கதவுகள் அமைக்க ரூ.3,500 கோடி செலவாகும் என்று தென்னக ரயில்வே சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஜூலை 24ஆம் தேதியன்று, சென்னை பரங்கிமலையில் நடந்த மின்சார ரயில் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மெட்ரோ ரயில்களைப் போன்று புறநகர் ரயில்களிலும் தானியங்கிக் கதவுகளைப் பொருத்த உத்தரவிட வேண்டுமென்று கோரி, வழக்கறிஞர் சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னைப் புறநகர் ரயில்களில் தானியங்கிக் கதவுகள் பொருத்துவது குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று (அக்டோபர் 11) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னக ரயில்வே சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. “மும்பை புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தானியங்கிக் கதவு பொருத்தப்பட்ட ரயில்கள், ஆறு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள புறநகர் ரயில்களில் தானியங்கிக் கதவு பொருத்த 3,500 கோடி ரூபாய் செலவாகும். புதிய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும்போது, அதன் வடிவமைப்பையும் பல மாற்றங்களையும் கொண்டுவர முடியும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon