மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

திண்டுக்கல்லில் அழகிரி!

திண்டுக்கல்லில் அழகிரி!

திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திண்டுக்கல்லில் சனிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெறும் கலைஞர் புகழஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சிகள் படுதீவிரமடைந்துள்ளன.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவைத் தொடர்ந்து மு.க. அழகிரி போர்க்கொடி தூக்கினார். தம்மை திமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறிவருகிறார்.

அப்படி திமுகவில் தன்னை சேர்த்தால் ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார் எனவும் அழகிரி கூறியிருந்தார். ஆனால் திமுக தரப்பில்மவுனமே பதிலாக இருந்தது. இதையடுத்து தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி கலைஞர் நினைவிடம் நோக்கிப் பேரணி நடத்தினார் அழகிரி.

இப்பேரணியில் தமது ஆதரவாளர்கள் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அழகிரி அறிவித்திருந்தார். அவ்வளவு பேர் கூடவில்லை என்றாலும் சுமார் 10,000க்கும் அதிகமானோரை சென்னையில் திரட்டியிருந்தார் அழகிரி. இதன் பின்னர் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்று திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசிவந்தார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் திமுகவுக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் எனவும் அவர் ஆரூடம் கூறிவந்தார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ‘அஞ்சா நெஞ்சர்’ அழகிரி பேரவையை திமுக அதிருப்தியாளர்கள் பகிரங்கமாகத் தொடங்கினர். இது திமுக மேலிடத்தை அதிர்ச்சி அடையச் செய்தது.

திண்டுக்கல் திமுகவின் கோட்டை... இங்கே யாரும் எதையும் அசைத்துவிட முடியாது என மாவட்டச் செயலாளர் ஐ.பெரியசாமி கூறிவந்தார். அத்துடன் தங்களது பின்னால்தான் மாவட்ட திமுக இருக்கிறது என்பதை நிரூபிக்க நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்தும் இருந்தார் ஐ.பெரியசாமி. ஆனாலும் சமூக ரீதியான அதிருப்திகள் திண்டுக்கல் திமுகவில் மேலோங்கத் தொடங்கின.

இதைச் சமாளிக்கும் வகையில் மாவட்ட திமுக தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் மு.க. அழகிரி பங்கேற்கும் கலைஞர் புகழஞ்சலி கூட்டம் சனிக்கிழமையன்று (அக்டோபர் 13) திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு திமுக நிர்வாகிகள் செல்வதைத் தடுக்கும் இறுதிக் கட்ட முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக ஐ.பெரியசாமியின் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து கணிசமான அதிருப்தியாளர்கள் அழகிரி பேரவையில் கை கோர்த்திருக்கின்றனர் .

திண்டுக்கல்லில் சனிக்கிழமையன்று அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எப்படிக் கூட்டம் கூடுகிறது என்பதை திமுக தலைமை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon