மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

மெரினா புரட்சி: சான்றிதழ் தரமறுப்பு!

மெரினா புரட்சி: சான்றிதழ் தரமறுப்பு!

மெரினா புரட்சி படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தரச் சென்னை மண்டலத் தணிக்கை குழு மறுத்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகத் தமிழகத்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் உலக நாடுகளுக்கும் விரிவடைந்தது. மெரினாவில் லட்சக்கணக்கானோர் கூடி இரவு, பகல் பாராமல் ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இறுதிநாளில் போலீஸ் தடியடி மற்றும் கலவரத்துடன் முடித்துவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி ஆரம்பமானது, அதன் பின்னால் இருந்தவர்கள் யார், ஜல்லிகட்டு தடைக்குப் பின்னால் இருந்தது யார், எனப் புலனாய்வு செய்யும் விதமாக மெரினா புரட்சி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மெரினா புரட்சி படத்தை சென்னை மண்டல தணிக்கைக் குழுவுக்குப் படக் குழுவினர் திரையிட்டுக் காட்டியுள்ளனர். படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்துள்ளனர். காரணம் எதுவும் கூறாமல் படத்தை மறு சீராய்வுக் குழுவுக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து திரைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “முன்னாள் மத்திய அமைச்சர், ஒரு பிரபல நடிகை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் இருப்பதாகப் படத்தின் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் அரசியல் அழுத்தம் காரணமாகவே படத்திற்குச் சான்றிதழ் தர மறுத்திருக்கலாம். அதனாலே படத்தை மறுசீராய்வுக் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு தகுந்த ஆதாரங்களைப் படக் குழு சமர்ப்பிக்கும் பட்சத்தில் படத்திற்குச் சான்றிதழ் வழங்குவர். ஒருவேளை அங்கும் மறுக்கப்பட்டால் டில்லியிலுள்ள ட்ரிபியூனலை (Film Certification Appellate Tribunal) நாடலாம். நாட்டில் கருத்துரிமை கேள்விக்குள்ளாவது தொடர்கதையாகி வரும் சூழலில் படத்திற்குச் சான்றிதழ் தர மறுத்திருப்பதை அதன் நீட்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் நடந்த போராட்டம் தொடர்பாக உருவான படத்திற்குச் சென்னை மண்டலக் குழுவே சான்றிதழ் தர மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றனர்.

எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களே நடித்துள்ளனர். யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon