மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ஜெயலலிதா என் தாய்: மனு தள்ளுபடி!

ஜெயலலிதா என் தாய்: மனு தள்ளுபடி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தாய் என்று கூறி அம்ருதா தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்துள்ளது.

தன்னை ஜெயலலிதாவின் மகள் எனக்கூறியும், இதற்காக டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும், ஜெயலலிதா உடலுக்கு தங்களது குல வழக்கப்படி சடங்குகள் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியும் பெங்களூரூவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதாவது 1980 ஆகஸ்ட் 14ஆம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசு வாதிட்டது.

இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு, டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோவில் உள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், தங்களிடம் ரத்த மாதிரிகள் எதுவும் இல்லை என்று அப்பல்லோ பதிலளித்துவிட்டது. இதனையடுத்து விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மனு தள்ளுபடி

இவ்வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இன்று (அக்டோபர் 12) வழங்கிய நீதிபதி வைத்தியநாதன், “ஜெயலலிதாவை தன் தாய் என்று கூறியதற்கு ஆதாரமாக புகைப்படங்களைக் கூட அம்ருதா சமர்ப்பிக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் யாரும் தற்போது உயிருடன் இல்லை, விளம்பரத்திற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும் “ஜெயலலிதா குல வழக்கப்படி பார்த்தாலும் ஜெயலலிதாவுக்கான வாரிசுகள் தீபாவும், தீபக்கும் மட்டுமே. அவர்களே இந்த வழக்கில் ஆர்வம் காட்டவில்லை, ஆதாரங்கள் தாக்கல் செய்யாததால் மரபணு சோதனை செய்யத் தேவையில்லை” என்று தெரிவித்த நீதிபதி, சொத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி அம்ருதாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon