மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

யாருக்கு அருகதை?

யாருக்கு அருகதை?

ஒரே விதமான கோபங்களைக் கொண்டவர்கள் நாம் என்று மாணவர்களைச் சுட்டிக்காட்டிய கமல் அவர்கள்தான் நாளைய தலைவர்கள் என்று கூறியுள்ளார்.

நாமக்கல்லில் உள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் செவாலியர் சிவாஜி கணேசன் நூலக திறப்பு விழா இன்று (அக்டோபர் 12) நடைபெற்றது இதில், கலந்து கொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “இந்த அவைக்கு வேண்டுமென்றால் நான் அடங்கலாம் ஆனால் அந்தச் சபைக்கு அடங்கமாட்டேன். காரணம் நற்சபையாக இருக்க வேண்டிய இடம் தரம்குறைந்து வேறாக இருப்பதனால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். இங்கே நான் ஓட்டு வாங்க வந்திருப்பேன் என்ற சந்தேகம் மூத்தவர்களுக்கு வரலாம். ஆனால் இளையவர்களுக்கு வராது” என்று கூறினார்.

“ஒரே விதமான கோபங்களைக் கொண்டவர்கள் நாம் என்று மாணவர்களைக் கை காட்டிய கமல் இது நாளைய தலைவர்கள் அமர்ந்திருக்கும் அவை நான் தொண்டர்களைத் தேடி வரவில்லை தலைவர்களைத் தேடி வந்துள்ளேன். மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நல்ல அரசியலைப் பற்றிப் பேச மாணவர்களைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது” என்று கமல் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிகளுக்குள் என்னை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு அரசாணையே இருப்பதாகவும் ஆனால், பள்ளியில் யாரும் நிரந்தரமாக தங்குவதில்லை மாணவர்கள் வெளியே வரும்வரை நான் காத்திருப்பேன்” என்றும் கூறினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், “ ஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் பதவி விலகுவதுதான் கௌரவம். குற்றம் தன் மீது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது தன் மீதான சந்தேகம் நீங்கும்வரை பதவியில் இருக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முன்பாக இருந்த பெரியவர்கள் செய்ததுதான் இது. ஆளுநரும் செய்வார் என்று நம்புவோம்” என்று குறிப்பிட்டார்.

,”மழைக்காகத் தேர்தலை தள்ளிப்போடாமல் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட கமல், “சிலை கடத்தல் என்பது நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கிறது. சிலைகளை மீட்க நாங்கள் உதவுகிறோம் என்று கூறியபோது, நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். இப்போது உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. கோயில் சம்பந்தப்பட்டவர்களின் உதவி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. சிலைகளைத் தமிழகத்தின் சொத்தாக நினைத்து மக்கள் போராட வேண்டும்” என குறிப்பிட்டார்.

மீ டூ விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் கருத்து கூற வேண்டும். எல்லோரும் கருத்து சொல்வது தவறாக இருக்கும், நியாயமும் இல்லை. மீ டு விவகாரத்தில் நியாயமான குற்றச்சாட்டை வைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon