மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 அக் 2018

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை!

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை!

தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று (அக்டோபர் 12) பகலில் வெளியிடப்பட்ட அறிக்கையின் சுருக்கத்தை மின்னம்பலம் மதியம் ஒரு மணி பதிப்பில் பார்த்தோம். ஆளுநர் மாளிகையின் இணை இயக்குனர் வெளியிட்ட அந்த அறிக்கையின் முழுமையான வடிவம் இதோ...

பொறுத்துப் பார்த்த பிறகே புகார் தந்தோம்!

“பொதுமக்களிடையே நிலவும் குழப்பத்துக்கும், கவலைக்கும் மதிப்பளித்து இந்த பத்திரிகை செய்தி இன்று வெளியிடப்படுகிறது. இந்திய நாடு மிகச் சிறந்த கலாச்சாரத் தொன்மை கொண்டது. குறிப்பாக தமிழ்நாடு திருவள்ளுவர் முதல் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் வரை வரலாற்றில் நீடித்து நிலைத்து நிற்கும் தத்துவத் தலைமைகளைப் பெற்ற நாடு. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்கள் நீதிக்கும், உண்மைக்கும், நல்ல குணங்களுக்கும் அணியமாய் நிற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த நேரத்தில் ஆளுநர் மாளிகை இந்த பத்திரிகை செய்தியை வெளியிட வேண்டியதன் தேவை என்னவென்றால், சமூக விரோத மற்றும் விஷமிகள் தங்கள் வரம்பை மீறி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சமூகத்துக்குக் கொண்டு செல்வதற்காகத்தான்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவியையும் ஆளுநர் அல்லது ஆளுநர் மாளிகையையும் தொடர்புபடுத்தி மிகத் தவறான, துளி கூட உண்மையில்லாத தகவல்கள் பரப்பப்படுகின்றன. நிர்மலாதேவி போலீஸாரிடம் கொடுத்திருக்கும் வாக்குமூலம் உண்மையை வெளிப்படுத்தும். இந்த வழக்கு இப்படி இருக்க ஆளுநர் மீது அவதூறான, மோசமான, கோழைத் தனமான செய்திகளைப் பரப்புவதைக் கண்டு மிகவும் பொறுத்துப் பார்த்து அதற்குப் பிறகே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இதை பத்திரிகை சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறது என்று சொல்வர்களின் செயல் நகைப்புக்கிடமானது.

எதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆளுநர் மாளிகை இந்த விஷயத்தில் மிக பெருந்தன்மையுடன் சுமார் ஆறு மாதங்களாக பொறுமையுடன் அமைதி காத்தது. திருமதி. நிர்மலாதேவி தொடர்பான விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியான நக்கீரன் இதழில் மஞ்சள்தனமான இதழியலை வெளிக் கொண்டுவந்திருந்தார்கள்.

ஆளுநர் மாளிகைக்குள் நிர்மலாதேவி நுழைந்ததில்லை

தங்களைப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், திருமதி நிர்மலா தேவி போலீசார் முன்னிலையில் கொடுத்த வாக்குமூலத்தைப் பற்றியெல்லாம் விசாரித்திடவேண்டும் என்று கருதவில்லை. மெத்தனம் மற்றும் கோழைத்தனத்தின் உச்சத்தை அந்தக் கட்டுரை வெளியீடு காட்டுகிறது.

உண்மை என்னவென்றால் திருமதி. நிர்மலாதேவி கடந்த ஒரு வருடத்தில் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்ததே இல்லை. ஆளுநருடனோ, ஆளுநரின் செயலாளர்களுடனோ, ஆளுநர் மாளிகை ஊழியர்களுடனோ நிர்மலாதேவிக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

அன்னைத் தெரசா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா மதுரை காமராஜர் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தபோது மதுரை சென்ற ஆளுநர், பல்கலையின் விருந்தினர் மாளிகைக்குச் செல்லவே இல்லை. விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஆளுநருக்கு நேரமும் இல்லை. மதுரை செல்லும்போது ஆளுநரோடு அவரது செயலாளர் செல்லவில்லை.

ஆளுநர் மாளிகையை பலவீனப்படுத்த முடியாது

உண்மையின் மீதும் நல்லெண்ணத்தின் மீதும் ஆழமான வெறுப்புணர்வு கொண்ட ஒருவரால் மட்டுமே நக்கீரனில் வெளிவந்திருக்கும் கட்டுரைகளைப் போல எழுத முடியும். முற்றிலும் தவறான தகவல்கள் அடங்கிய இதுபோன்ற மஞ்சள் பத்திரிகை இதழியலை சமூகத்தில் மிகுந்த மதிப்புக்குரியவர்களே உண்மைகள் அறியாமல் ஆதரிப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்ற அரசியல் தலைவர்கள், எம்.ஜி.ஆர், அப்துல் கலாம் போன்ற பாரத் ரத்னாக்கள் தங்களது சிந்தனையாலும், செயல்பாடுகளாலும், எழுத்துகளாலும், பேச்சுகளாலும் இந்தத் தமிழகத்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்கள் எவ்வித எல்லை மீறலையும் நிகழ்த்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையற்ற அவதூறுச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக ஆளுநர் மாளிகை மூலம் சட்டத்துக்கு உட்பட்டே புகார் கொடுக்கப்பட்டது.

ஜனநாயகத்தில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு என்றும் இடம் உண்டு. ஆனால் அரசியல் சாசன அதிகாரத்துவம் மிக்க ஆளுநரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்பாடுகளால் கௌரவம் மிக்க ஆளுநர் மாளிகையை பலவீனப்படுத்திவிட முடியாது”

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வெள்ளி 12 அக் 2018