மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

தமிழ் சினிமாவின் புதிய பறவை!

 தமிழ் சினிமாவின் புதிய பறவை!

விளம்பரம்

சீமராஜா இசை வெளியீட்டு விழாவில் முதல்முறையாகக் கேட்கப்பட்டது ‘யார் அந்த பையன்?’ என்ற கேள்வி. இவரைத் தெரியாதா? நட்சத்திர கிரிக்கெட் லீகில் பவுலராக கலக்கிய ரிஷிகாந்த் தான் அவர் என்று தொடங்கியது ஒரு பதில். தற்போது தமிழ் சினிமா முழுக்க சுற்றிக்கொண்டிருக்கிறது.

சீமராஜா திரைப்படத்தில் வில்லனாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர் ரிஷிகாந்த். வாட்டசாட்டமான உடல், தீர்க்கமான பார்வை என தமிழ் சினிமா ரசிகர்களிடையே பதிந்துபோன ரிஷிகாந்த் என்ற பெயர் தான் காட்டுப்புறா திரைப்படத்தின் டைட்டிலையும் அலங்கரித்திருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கணேஷ் பாபுவின் மகன் இவர். காட்டுப்புறா படத்தில் நடித்தது குறித்தும், சினிமா அனுபவம் குறித்தும் ரிஷிகாந்த் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப் பார்ப்போம்.

“தமிழ் சினிமாவின் வழக்கமான கனவுக் கதைகளின் தொடக்கம் எனக்கு இல்லை. சாதாரணமாக உடல் ஆரோக்கியத்தில் தொடங்கியது ஃபிட்னஸ் ஆர்வம். அதற்கான ஆராய்ச்சிகளின் பலனாய் 2016இல் களமிறங்கி, அயராத உழைப்பின் காரணமாக இரண்டு வருடங்களில் 18 ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டு, 13 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறேன்” என ரிஷிகாந்த் சொல்லும் அதேசமயத்தில் தான் அவரது சினிமா வாழ்க்கையும் தொடங்கியது.

“பராக்கிரம செயல்களைச் செய்யும் வில்லன் தேவை என்றதும், வட மாநிலத்திலிருந்து ஒருவரைக் கொண்டுவந்துவிடுகிறார்கள். கிராமத்து கேரக்டருக்கு கொஞ்சமும் செட் ஆகாத அவர்களைப் பார்க்கும்போது, தமிழ் மண்ணுக்குரிய நிறத்தில் அவர்களில் ஒருவனாய் இருக்கும் நானே ஏன் வில்லத்தனத்துக்கான அத்தனை சிறப்புகளையும் வளர்த்துக்கொள்ளக்கூடாது என்ற ஆர்வத்தினால் களம் கண்டிருக்கிறேன்” என்கிறார்.

“சீமராஜா திரைப்படத்தின் ஓப்பனிங் எனக்கு முக்கியமானது. இதற்காக சிவகார்த்திகேயன் அண்ணனுக்குத்தான் என் நன்றியை சொல்லவேண்டும். எதிர்பாராத நேரத்தில் என்னை அழைத்து, சீமராஜா இசை வெளியீட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த மகிழ்ச்சி, படம் ரிலீஸாகி வெற்றிபெற்ற பின்னும் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் மூலம் தொடர்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறும் ரிஷிகாந்துக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. அது சமரசம் செய்யாத தெளிவு.

“நான் சமரசங்களை எப்போதும் விரும்பாதவன். நன்றாக கிரிக்கெட் விளையாடும் திறமையிருந்ததால், ரஞ்சி டிராபி வரை சென்றேன். ஆனால், அங்கிருந்த அரசியலின் காரணமாக வெளியேறிவிட்டேன். பிறகு கைப்பந்து, நீச்சல் என என் பாதை மாறியது. ஆனால், அங்கேயும் ஒரு அரசியல் உட்கார்ந்துகொண்டு சமரசத்துக்கு இழுத்தது. அதன்பிறகு ஆணழகன் போட்டிக்கு உடலைத் தயார் செய்யத் தொடங்கினேன். இன்று அந்த முயற்சியே எனக்கு சினிமா வாய்ப்பை வாங்கிக்கொடுத்திருக்கிறது. சீமராஜா படத்தில் பார்த்தது போல, என்னை காட்டுப்புறா படத்தில் பார்க்கமுடியாது. ஒவ்வொரு படத்துக்குமான வித்தியாசத்தை நான் கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்குத் தேவையான நேரத்தை எனக்குக் கொடுக்கவேண்டும் என்பது தான் நான் இயக்குநர்களிடம் கேட்கும் ஒரே கோரிக்கை. விக்ரம், விஜய் சேதுபதி போன்றவர்கள் அப்படித்தான் தங்களை ஒரு நடிகனாக முன்னிறுத்திவருகின்றனர்” என்று கூறும் ரிஷியிடம் கமெர்ஷியல் ஹீரோ போல இருந்துகொண்டு நடிப்புக்கு முக்கியத்துவம் என்பது எப்படி சாத்தியப்படும் என்ற கேள்வியைக் கேட்கவேண்டியது அவசியம்.

காட்டுப்புறா திரைப்படம் ஒரு திகில் கதையைக் கொண்டது. அதில் உணர்வுகளை முகத்தில் கொண்டுவந்தால் தான் மக்களுக்கு அந்தச் சூழலைப் புரியவைக்க முடியும். மக்கள் பார்க்கும்போது சத்தத்துடனும், மற்ற காட்சிகளுடனும் பார்ப்பார்கள். ஆனால், நான் நடிக்கும்போது இயக்குநர் சொல்வதையே மனதுக்குள் காட்சிப்படுத்தி அங்கு எவ்வளவு தேவையோ அந்த நடிப்பைக் கொடுக்கவேண்டும். இங்கு தான் ஒரு கமெர்ஷியல் ஹீரோவைவிட நடிகன் அதிகம் தேவைப்படுகிறான். அடுத்து நான் நடிக்கும் ‘ஸ்பாட்’ என்ற திரைப்படம் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்” என்று பேசும் ரிஷிகாந்தின் நம்பிக்கை, திறமையான இளம் நடிகர் ஒருவர் தமிழ்சினிமாவில் காலெடுத்து வைத்துவிட்டதை உணர்த்துகிறது.

விளம்பர பகுதி

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon