மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

காலக்கெடுவுக்கு முன்னதாக நடவடிக்கை: அபராதம்!

காலக்கெடுவுக்கு முன்னதாக நடவடிக்கை: அபராதம்!

ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட மூன்று பேர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாகக் கூறி, அவற்றை 21 நாட்களுக்குள் அகற்ற வேண்டுமென்று செங்கல்பட்டு வட்டாட்சியரும், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளரும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 13) நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 21 நாள் காலக்கெடு அக்டோபர் 17ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டை இடித்துவிட்டதாக அன்பரசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின்படி, இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது, காலக்கெடு முடியும் முன்னர் வீட்டை எப்படி இடிக்க முடியுமெனவும், அதிகாரிகள் சட்டத்திற்கு மேலானவர்களா? எனவும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“இது நாகரிக சமுதாயமா அல்லது காட்டாட்சியா? மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் கூட, சட்டப்படி தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இடிக்கப்பட்ட வீட்டில் இருந்தவர்களை உங்கள் வீட்டில் தங்குவதற்கு உத்தரவிடலாமா?” என்று கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள். அதற்கு, வீட்டை இடிக்கத் தான் உத்தரவிடவில்லை என பெண் தாசில்தார் மன்னிப்பு கோரினார். ஆனால், தாசில்தார் தான் இடிக்க உத்தரவிட்டார் என்று பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் திட்டவட்டமாகக் கூறினார்.

இதையடுத்து, இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர் நீதிபதிகள். அந்த தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon