மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மாணவியை மாற்றிய விபத்து!

மாணவியை மாற்றிய விபத்து!

கல்லூரி படித்துக்கொண்டே மீன் விற்றுக் குடும்பத்தைக் கவனித்துவரும் மாணவி ஹனன் ஹமீது, ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஹனன் குடும்பத்தைக் காப்பாற்றவும், செலவுகளைச் சமாளிக்கவும் கல்லூரி முடிந்த பின்னர் மீன் விற்பனை செய்து வந்தார். அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உட்படப் பலரிடம் இருந்து, மாணவி ஹனனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதற்கிடையில், தன்னைப் பிரபலப்படுத்துவதற்காகத் திட்டமிட்டு அவர் இதைச் செய்கிறார் என்று விமர்சனமும் எழுந்தது. அவரை அவதூறாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவருக்கு உதவும் பொருட்டு, சினிமாவில் நடிக்க சில இயக்குநர்கள் வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். இதையடுத்து, கடந்த 3ஆம் தேதியன்று கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் உள்ள கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்தார் ஹனன் ஹமீது. இதற்காகத் திருச்சூர் நோக்கிச் சென்றபோது, அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனனுக்குப் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில், அவருக்கு முதுகுத்தண்டில் முறிவு ஏற்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் சீரடைந்து வரும் ஹனன், தற்போது சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் ஆன்லைன் மூலம் மீன் விற்க முடிவு செய்துள்ளார். தெருவில் மீன் விற்ற ஹனன், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மீன் விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். இதற்காக எர்ணாகுளம் அருகில் உள்ள தம்மனம் பகுதியில் ஒரு கடைக்கு முன்பணம் கொடுத்திருந்தார். இந்நிலையில், கடை உரிமையாளருக்கும் ஹனன் உறவினர்களுக்கும் இடையே திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, கடை உரிமையாளரின் உறவினர்கள் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடை திறக்கும் திட்டத்தைக் கைவிட்டார் ஹனன்.

தற்போது இவர் ஆன்லைனில் மீன் விற்கும் முடிவை எடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், தனது உடல்நலம் தேறி வருவதாகத் தெரிவித்தார். “முழுமையாகக் குணமாகவில்லை. மீன்களை வாங்கிச் சுத்தம் செய்து, ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். இதற்கான தொழில்நுட்ப விஷயங்களைக் கோரியுள்ளேன். வியாபார போக்குவரத்துக்காக ஒரு வாகனமும் வாங்கவுள்ளேன்” என்று நம்பிக்கையுடனும் மிகுந்த புத்துணர்ச்சியுடனும் தெரிவித்துள்ளார் ஹனன்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon