மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

சிறப்புத் தொடர்: கண்ணுக்குத் தெரியாத சுனாமியில் சிக்கிய சென்னை!

சிறப்புத் தொடர்: கண்ணுக்குத் தெரியாத சுனாமியில் சிக்கிய சென்னை!

நரேஷ்

கடல் நீர் உட்புகுந்து சென்னையைச் சீரமைத்ததை, வாழ்விடங்களை சீரழித்ததை 'சுனாமி பேரழிவு' என்கிறோம். இப்போதும் சுனாமி சென்னையைத் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. ஏனெனில், அது நிலத்துக்குக் கீழ் நிகழ்ந்து வரும் பேரழிவு.

கடல் நீர் நிலத்தின் மேற்பரப்பில் பொங்கி வருவது இயற்கைப் பேரழிவு என்றால், கடல் நீர் நிலத்துக்கு அடியில் உட்புகுந்து நிலத்தை நிறைத்து மேற்பொங்குவது சீர்செய்ய முடியாத சீரழிவு. அதுதான் இப்போது நடந்துவருகிறது. கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை விடவும் அபாயமானது நிலத்தடி நீர் விநியோகத் திட்டம். அதுவும் கடற்கரையில் உள்ள ஊர்களில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் அவை கணக்கிட முடியாத பாதிப்புகளை உண்டாக்கும். அதன் விளைவுகளைதான் தற்போது சென்னை சந்தித்து வருகிறது.

சென்னையின் நீர் வளம் குறித்து எந்தவொரு புரிதலும் இல்லாதவர்களால்தான் இப்படியான திட்டங்களைத் தீட்ட முடியும். நீர் நிறைந்த, வளமான சென்னையின் மிகமுக்கிய நீராதாரமாக நிலத்தடி நீர் இருப்பது எவ்வளவு பெரிய முரண்?

சென்னையின் நீர் இருப்பைத் தவிர்த்துவிட்டு, சென்னைக்கு வரும் மழை யை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு வருடத்தில் சென்னைக்கு மட்டும் சராசரியாக 1300-1350 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. இவ்வளவு மழை பெய்யும் நகரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்பது வேடிக்கையாக இல்லை? நம்மிடம் வளத்திற்கு குறைவில்லை. அதைச் சேமிக்கவும் பயன்படுத்தவும் தெரியாமல்தான் திணறிக் கிடக்கிறோம்.

இங்கே மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால், இவ்வளவு மழை நீரையும் நாம் நிலத்திற்குள் அனுமதிப்பது இல்லை, தேக்கி வைப்பதில்லை. ஆனால், தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டே இருக்கிறோம். இதனால் கடல் நீர் உட்புகிறது என்பது மேம்போக்கான புரிதல். உண்மையான அறிவியல் என்னவென்று பார்ப்போம்.

கடல் நீர் எப்படி உட்புகும்?

நிலத்தடி நீருக்கும், கடல் இருக்கும் இடையில் இருப்பது 'Density barrier'. இது இயற்கையானது. தங்களது கடினத் தன்மையினால் இந்த இரு நீர்களும் இயற்கையாக பிரித்துவைக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கையாக இணைவதற்கு வாய்ப்பேயில்லை. பல ஆண்டுகள் மழை பெய்யாமல் நிலத்தடி நீர் வறண்டு அங்கே வெற்றிடம் ஏற்பட்டாலும், கடல் நீர் உட்புகாது.

அப்படியிருக்கும்போது, நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்போது ஏற்படும் வெற்றிடத்தில் மட்டும் எப்படி கடல் உட்புகுகிறது? இயற்கையாக வறட்சி ஏற்படும்போது, நிலத்தடி நீர் வறண்டு வெற்றிடம் ஏற்பட்டால் அங்கே 'Density barrier' அப்படியேதான் இருக்கும். ஆனால், ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்போது இந்த இயற்கையான தடுப்பு உடைகிறது. வெற்றிடத்தில் இந்த இயந்திரங்கள் கொடுக்கும் இழுவை விசை, இந்த இயற்கையான 'Density barrier'-ஐச் சிதைத்து, கடல் நீரை உட்புக அனுமதிக்கிறது. சென்னையில் இதுவரை 5 இடங்களில் கடல் உட்புகுந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு சாம்பிள்கள் சான்றளிக்கின்றன.

நிலத்தடி நீரின் நிலை

கடல் நீர் மட்டுமல்லாது, தொழிற்சாலைக் கழிவுகளாலும் கெட்டுப்போயிருக்கிறது நிலத்தின் உயிர் நீர். வடபழனி, ஆழ்வார்த் திருநகர் போன்ற பகுதிகளில் துர்நாற்றம் கலந்த கருப்பு வண்ண நிலத்தடி நீர்தான் கைப்பம்புகளில் கசிகிறது. நேராக ஆறுகளிலும் ஏரி குளங்களிலும் கலந்துவிடப்படும் தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்தடி நீருடன் நேரடியாக சங்கமிக்கிறது.

இனி நாமே நினைத்தாலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்தினாலும், அவை உப்பாகவும், கழிவாகவும் மட்டுமே எஞ்சியிருக்கும். நிலத்தடி நீரைக் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பதால்தான் அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இயற்கை நியதி. அதை மீறும்போது இயற்கையின் எதிர்வினையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

சென்னையில் மட்டுமல்ல, மதுரையில் மாநகராட்சியே முழு முனைப்புடன் நிலத்தடி பம்புகளை அமைத்துவருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் நிலத்தடி நீரை வரைமுறையில்லாமல் உறிஞ்சி, நிலத்தின் தன்மையே உப்பாகிவிட்டது. ராமநாதபுரத்தின் கிணறுகளில் கடல்நீர் நிறைந்து நிற்கிறது. இவை யாவற்றிற்கும் நிலத்தடி நீர் பயன்பாட்டை நிறுத்துவதுதான் ஒரே தீர்வாகும்.

தலைநகர் தலைமையேற்று இச்சீர்திருத்தத்தை முன்னெடுத்தால், மற்ற மாவட்டங்களும் மாநகரங்களும் மாற்றத்தைப் பின்தொடர்ந்து பயனடைவார்கள்.

தீர்வை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம்..!

(சென்னைக்கான தீர்வுத் தேடல் நாளை மறுநாள் தொடரும்…)

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon