மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

மீ டூ எதிரொலி: படப்பிடிப்பை நிறுத்திய அக்‌ஷய்

மீ டூ எதிரொலி: படப்பிடிப்பை நிறுத்திய அக்‌ஷய்

அக்‌ஷய் குமார் தான் நடிக்கும் ஹவுஸ் ஃபுல் 4 படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் மீ டூ மூவ்மென்ட் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாலிவுட்டில் முக்கிய திரைபிரபலங்கள் மேல் பல புகார்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பாலிவுட்டைச் சேர்ந்த நானே படேகர் முதல் ராஜத் கபூர், பியூஷ் மிஸ்ரா, கைலாஷ் கெர், அலோக் நாத், விகாஷ் பால், சுபாஷ் கை, இயக்குநர் சஜித் கான் வரை பலர் மேல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

பாலிவுட் நடிகைகள் சலோனி சோப்ரா, ரச்சல் ஒயிட், பத்திரிகையாளர் கரிஷ்மா உபத்ஹியய் ஆகியோர் இயக்குநர் சஜித் கான் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பகிரங்கமாக கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் சஜித் கானின் சகோதரியும் இயக்குநருமான ஃபரா கான் தனது ட்விட்டர் பதிவில், “இது எங்கள் குடும்பத்திற்கு இதயம் நொறுங்கும் தருணம். மிகவும் இக்கட்டான பிரச்சினையில் வேலை பார்த்துவருகிறோம். எனது சகோதரர் இந்த விதமாக நடந்துகொண்டிருந்தால் அதற்காக அவர் பதிலளித்தே ஆகவேண்டும். நான் இந்த நடத்தையே எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பியுள்ள அக்‌ஷய் குமார் தான் நடிக்கும் ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். படத்தின் இயக்குநரான சஜித் கான் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களிடம் கூறி அவர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குற்றம் நீருபிக்கப்பட்டவர்களுடன் இணைந்து நான் பணியாற்றுவதில்லை” என்று கூறியுள்ளார். மேலும் நானா படேகரும் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது.

இதுகுறித்து சஜித்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் மீது வைக்கப்பட்டுள்ள புகார்களால் எனது குடும்பம், தயாரிப்பாளர்கள், ஹவுஸ்ஃபுல் 4 நடிகர்கள் மேலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே நான் இந்த படத்தை இயக்குவதில் இருந்து விலகுகிறேன். இப்போது வரை உண்மையை நிரூபிக்க நான் முயற்சித்து வருகிறேன். எனது ஊடக நண்பர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் உண்மை வெளிவருவதற்கு முன் தீர்ப்பு வழங்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon