மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

கோலிக்கு முத்தமிட முயன்ற ரசிகர்!

கோலிக்கு முத்தமிட முயன்ற ரசிகர்!

ஹைதாராபத்தில் நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் நடுவே ரசிகர் ஒருவர் வேகமாக மைதானத்துக்குள் நுழைந்து கோலியை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றுள்ளார்.

இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களை சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 98 ரன்களை சேர்த்து இன்னும் ஆட்டமிழக்கமால் உள்ளார். அந்த அணியின் கேப்டன் ஹோல்டெர் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து கோலியை நெருங்கியதைப் போலவே இந்த போட்டியிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் காலை செசனில் பார்வையாளர் பகுதியில் இருந்த ரசிகர் ஒருவர் மிகுந்த பாதுகாப்புகளையும் தாண்டி மைதானத்துக்குள் வேகமாக ஓடிவந்தார். சரியாக 70 மீட்டர் தொலைவுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவந்த அந்த ரசிகர் கோலியைக் கட்டியணைத்தார். மேலும் முத்தமிடவும் முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத கோலி அதிலிருந்து விலக முயன்றார். இதையடுத்து அந்த ரசிகர் கோலியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்குக் கோலியும் சம்மதிக்க செல்ஃபி எடுத்துக்கொண்டு மீண்டும் பார்வையாளர் பகுதிக்கு அவர் திரும்பினார்.

தொடர்ந்து இரண்டாவது போட்டியாக ரசிகர்கள் மைதானத்துக்குள் எளிதில் நுழைந்து கோலியை நெருங்கியிருப்பது அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகளைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் கோலியுடன் அந்த ரசிகர் செல்ஃபி எடுத்துக்கொண்ட காட்சிகள் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon