மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 அக் 2018

தயாநிதிக்கு எதிரான நோட்டீஸ்: நீதிமன்றம் தடை!

தயாநிதிக்கு எதிரான நோட்டீஸ்: நீதிமன்றம் தடை!

இரண்டு நிதியாண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்ய தயாநிதி மாறன், சன் டைரக்ட், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனங்களுக்கு எதிராக அனுப்பிய நோட்டீஸ் மீது வரும் 22 ஆம் தேதிவரை மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2008- 2009, 2009- 2010 ஆகிய ஆண்டுகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை தயாநிதி மாறன் உள்ளிட்டோர்க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் “ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மறு ஆய்வு கோரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித் துறைக்கு அதிகாரம் இல்லை. தற்போதைய நிலையில், வருமான வரித் தாக்கலை மறு ஆய்வு செய்ய ஏன் நோட்டீஸ் அனுப்பினார்கள் என்று நான் எழுதிய கடிதத்திற்கு முறையாக வருமான வரித்துறை பதில் அளிக்கவில்லை.

விதிகளுக்கு முரணாக கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வருமான வரித் துறை இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த வழக்கிலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள தயாநிதி, அதன் அடிப்படையில் வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கான காரணத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் அளிக்க மறுத்துவிட்டதாகவும் சன் டைரக்ட் நிறுவனம் தன்னுடைய சகோதரர் நிறுவனம் எனவும் அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த விதத்திலும் பொருளாதார ரீதியாக அல்லது நிதித் தொடர்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.

“ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில் சன் டைரக்ட் நிறுவனம், கலாநிதி மாறன், பிரியா மாறன் ஆகியோருக்கும் எனக்கும் (தயாநிதி மாறன்) வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது . குற்றப்பத்திரிக்கை அடிப்படையில் வரித் துறை நோட்டீஸ் அனுப்ப முடியாது. அதே போன்று எனக்கு சன் டைரக்ட் நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக அல்லது நிதித் தொடர்புகள் இருந்தன என்பதற்கான எந்த விதமான ஆதாரத்தையும் வருமான வரித் துறை தாக்கல் செய்யவில்லை எனவே 2 நிதியாண்டுக்கு வருமான வரி மறு ஆய்வுக்கு, வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த அக்டோபர் 10ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சம்பந்தப்பட்டவர்களின் வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதில் ஆரம்ப நிலையிலேயே நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்ததோடு,

தயாநிதி மாறன், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனம் மற்றும் சன் டைரக்ட் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வருமான வரித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட மறு ஆய்வு நோட்டீஸை ரத்து செய்ய கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தயாநிதி மாறன், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனம் மற்றும் சன் டைரக்ட் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் குலுவாடி.ஜி.ரமேஷ், கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக வருமான வரித் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

சனி 13 அக் 2018