மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது!

சிறப்புக் கட்டுரை: கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது!வெற்றிநடை போடும் தமிழகம்

தேவிபாரதி

புவி வெப்பமயமாதல் சார்ந்த ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை மனித குலத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை போல் தெரிகிறது. மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பூமி சீக்கிரத்திலேயே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் எனக் கணித்ததை இப்போது ஐநாவின் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இன்னும் பன்னிரெண்டே ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1,5 டிகிரி செல்சியல் அளவுக்கு உயரும். இதன் விளைவுகள் மோசமானவை. வறட்சியாலும் வெள்ளப் பெருக்காலும் பல கோடி மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும், அதன் விளைவாகக் கடல் மட்டம் உயரும். கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்குவதோடு வரும் 2050க்குள் புவி முழுவதும்கூட வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும் அபாயம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளைத் தாக்கிய புயல், சூறாவளி, வெள்ளப் பெருக்கு, வறட்சி, எரிமலைச் சீற்றம், வனத் தீ ஆகிய இயற்கைப் பேரழிவுகள் அதற்கான முன்னறிவிப்புப் போல் தென்படுகிறது.

கற்பனை நிஜமாகும் விபரீதம்

அமெரிக்கா உள்ளிட்ட பசிபிக் பெருங்கடல் நாடுகள் தொடர்ந்து சூறாவளியாலும் புயல்களாலும் பெரும் அச்சுறுத்தல்களைச் சந்தித்திருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொழில் வளர்ச்சி பெற்ற சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பலவும் புயல், சூறாவளி, நிலநடுக்கம் முதலான இயற்கைப் பேரிடர்கள் பலவற்றைச் சந்தித்துப் பெரும் இழப்புக்களைச் சந்தித்துவருகின்றன. நிலநடுக்க அபாயத்திலிருக்கும் இந்தோனேஷியா போன்ற பின்தங்கிய நாடுகளின் மக்கள் போக்கிடமற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். ஈரான், ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகள் சிலவற்றையும் வெள்ள அபாயம் சூழத் தொடங்கியிருக்கிறது. பல நாடுகளில் கடந்த நூறாண்டுகளில் பெய்த அதிகபட்ச மழைப் பொழிவுகள் பதிவாகியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

இந்த வெப்பநிலை அதிகரிப்பால் மலேரியா, டெங்கு முதலான நோய்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக ஐநாவின் அந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது. ஐநா வெளியிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையைப் பார்த்தால் டே ஆப்டர் டுமாரோ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் பேரழிவுக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. உலக அழிவு பற்றி நிலவிவரும் கற்பனைகள் வெறும் கற்பனைகள் அல்ல என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய நிலவரம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் பெய்து தீர்த்த அதீத மழைப் பெருக்கால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களும் உயிரிழப்புகளும் கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் காவிரியின் தடுப்பணைகளின் பாலங்கள் சேதமடைந்ததும் அதனால் ஏற்பட்டிருக்கும் இழப்புக்களும் உதாரணங்கள். கேரளா, கர்நாடகம் தவிர அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் சிலவும் கடும் வெள்ளப் பெருக்கைச் சந்தித்திருக்கின்றன. கடந்த பருவ மழையின்போது வறட்சியும் வெள்ளப் பெருக்கும் விவசாய உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதோடு உலகம் முன்னெப்போதும் சந்தித்திராத உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

புவி வெப்பமயமாதலின் விளைவாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளே மோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐநா ஆய்வறிக்கை புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடவும் ஏற்படவிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து புவியை, கோடிக் கணக்கான மக்களைக் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உலக நாடுகளை வலியுறுத்தியிருக்கிறது.

தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதை

ஆனால், இந்த எச்சரிக்கை மிகத் தாமதமானது. சுதாரித்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களையும் அவகாசத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ளாதது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் சூழலியல் ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் விடுத்த எச்சரிக்கையை ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் போதிய அக்கறை செலுத்தாதற்கு தாமதமான, கிட்டத்தட்டக் கடைசி நேரத்தில் ஐநா விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கையை உதாரணமாகச் சொல்ல முடியும்.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட புவி வெப்பமயமாதல் சார்ந்த மாநாடுகளிலும் ஆய்வுக் கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசுகள் நடைமுறைப்படுத்துவதையும் அவற்றைக் கண்காணிப்பதையும் தன் பொறுப்பில் வைத்திருக்க வேண்டிய ஐநா போன்ற அமைப்புகள் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க முயற்சித்திருக்கின்றன.

அக்கறையின்மையின் விளைவுகள்

காடுகள் அழிக்கப்படுவது, உயிரியல் சமநிலை சீர்குலைக்கப்படுவது ஆகியவை குறித்து உலக நாடுகளில் பெரும்பாலனவை போதிய அக்கறை செலுத்தாதன் விளைவாகவே அமேசான் மழைக்காடுகள் போன்ற இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்கும் பல மழைக்காடுகள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன. கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக கடந்த இருபதாண்டுகளில் மத்திய இந்தியாவின் வனப்பகுதி மிக மோசமான முறையில் சூறையாடப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் பேராசைக்காக இயற்கையைச் சூறையாடும் போக்கு முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகரித்திருக்கிறது. வனவளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க முயன்ற சமூக ஆர்வலர்களையும் வனப்பகுதி மக்களையும் அரசு கடுமையாக ஒடுக்குகிறது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய இந்தியாவின் வனங்கள் சீரழிக்கப்படுவதற்கு எதிராக மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடிய பழங்குடி மக்களில் பலர் கொல்லப்பட்டனர். வனப்பகுதியின் வளர்ச்சிக்குப் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துப் போராடும் வனப்பகுதி மக்களைச் சமாதானப்படுத்த முயல்கிறது.

இயற்கையை அழிக்கும் கார்ப்பரேட் வளர்ச்சி

இயற்கையோடு இயைந்து வாழப் பழக்கப்பட்ட வனப்பகுதி மக்களுக்கு ஆசை காட்ட முயல்கிறது அரசு. அவர்களது வாழ்க்கையை மாற்ற முற்படுகிறது. வளர்ச்சியில் அவர்கள் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்ப வைக்க முயல்கிறது. அரசு குறிப்பிடும் வளர்ச்சி என்பது உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி. இயற்கையைப் பலிகொடுத்துப் பெறப்படும் வளர்ச்சி. இயற்கை சார்ந்து வாழ்பவர்களுக்கு, இந்த வளர்ச்சியில் ஒரு அற்பப் பங்கைக் கொடுத்துத் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசு முனைகிறது.

வளர்ந்த, வளர்ச்சி பெற்ற, பின் தங்கிய எல்லாச் சமூகங்களுக்கும் வளர்ச்சி பற்றி உருவாக்கப்படும் கனவு கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஏற்கனவே நமது வாழ்க்கை கார்ப்பரேட்டுகளால் வடிவமைக்கப்பட்டுவிட்டது. உணவு, உடை, இருப்பிடம், அரசியல், பண்பாடு, நம்பிக்கை, கௌரவம், மதிப்பீடுகள், என வாழ்வின் அனைத்துக் கூறுகளும் கார்ப்பரேட்டுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நுகர்வுக் கலாச்சாரம் என்ற நுகத்தடிக்குக் கீழ் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. கல்வி, மருத்துவம், போக்குவரத்து முதலான அத்தியாவசியத் தேவைகள் தொடங்கி வாழ்வைக் கொண்டாட்டமாக மாற்றுவதற்கான உற்பத்தி சாதனங்களைத் தயாரித்து அளிப்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் முனைப்பாக இருக்கின்றன.

உணவு விடுதிகள், ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள், கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, பொழுது போக்கு மையங்கள், சுற்றுலாக்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், ஆட்டோக்கள், ரயில் பெட்டிகள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகள், ஆயுதத் தளவாடங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினி வகைகள், அலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள், அலைபேசிக் கருவிகள், மதுவகைகள், குளிர்பானங்கள், தொலைக்காட்சி, திரைப்படத் தயாரிப்புக்கான தொழில்நுட்பக் கருவிகள், என இவற்றில் எது இல்லாமலும் வாழ முடியாது. வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் வடிவமைப்பவையாகவும் தீர்மானிப்பவையாகவும் இருப்பவை இவற்றைத் தயாரித்து விநியோகிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தாம். அவற்றின் உற்பத்தி ஆலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடுதான் புவியின் வெப்பநிலையை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அவை காடுகளையும் அழிக்கின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நாசமாக்குகின்றன. நிலத்தடி நீரைப் பயன்படத்த முடியாத அளவுக்கு நஞ்சாக்குகின்றன. இப்போது நீர் அவற்றின் கொள்ளை லாபத்துக்கானதாக மாறியிருக்கிறது. பெட்ரோல், டீசல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் இவையெல்லாம் இல்லாவிட்டால் வாழ்க்கை முடங்கிப் போய்விடும் என்பது ஒரு கசப்பான உண்மை. வாழ்க்கையை வடிவமைத்திருக்கும் அவற்றைக் கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுகளும் அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் அரசுகளுமே இன்னும் பத்தாண்டுகளில் உலகம் சந்திக்கவிருக்கும் சூழலியல் பேரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஐநாவின் எச்சரிக்கையைக் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் அரசுகள் கார்பரேட்டுகளின் நலன்களுக்கு எதிரான அரசியல், பொருளாதார, பண்பாடுக் கொள்கைகளை வகுக்க வேண்டும். அது எந்த ஒரு நாட்டுக்குமே தற்கொலைக்குச் சமமான முடிவாகத்தான் இருக்க முடியும். நவீன உலகின் பொருளாதார அடிப்படைகள் திட்டவட்டமான விதிகளால் ஆளப்படுகின்றன. எந்த ஒரு அரசும் சூழலியலைப் பாதுகாப்பதற்காக, புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக வளர்ச்சியைப் பலி கொடுக்கத் தயாராக இல்லை.

யாரும் திரும்பிச் செல்லவே முடியாது. அப்படித் திரும்பிச் செல்ல வேண்டுமானால் நீங்கள் உங்கள் வாழ்வை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டும். கார்கள் இல்லாமல், இரு சக்கர வாகனங்கள் இல்லாமல், தொலைக்காட்சி, அலைபேசி இல்லாமல் வாழப் பழகிகொள்ள வேண்டியிருக்கும். அது பற்றிய கற்பனைகளுக்கான இடம்கூட இப்போது இல்லை.நிலைமை கையை மீறிப் போயிருக்கிறது.

என்ன செய்ய வேண்டும் என்னும் கேள்வியை எதிர்கொள்வது பற்றிய பதற்றம் சூழலியல் மீது அக்கறை கொண்டுள்ள தனிநபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுச் சூழலைப் பாதிக்காத வேளாண்மை, வாகனங்கள், எரிபொருட்கள் பற்றிய அவசரமான யோசனைகள் முன் வைக்கப்படுகின்றன. அதே சமயம் உலக முடிவு பற்றிய கற்பனைகள் பெருகிகொண்டிருக்கின்றன. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் சொன்னது போல மனிதன் வாழ்வதற்கான வேறு ஏதாவது கிரகத்தைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்குமா? அது பற்றி உருவாகிக்கொண்டிருக்கும் கற்பனைகள் வெற்றிகரமான ஹாலிவுட் திரைப்படங்களாகின்றன. பதற்றமே இல்லாமல் அவற்றைக் கொண்டாடித் தீர்க்கிறது மனித குலம்.

பேரழிவுக்கு வெறும் பன்னிரெண்டே ஆண்டுகள்தாம் மீதமிருக்கின்றன என்னும்போது அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது அல்லவா?

(கட்டுரையாளர்: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: [email protected])

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon