மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

துணை ஜனாதிபதியை சந்தித்த துணை முதல்வர்!

துணை ஜனாதிபதியை சந்தித்த துணை முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான அரசியல் முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்... நேற்று (அக்டோபர் 12) சென்னையில் தங்கியிருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை துணை முதல்வர் ஓ.பன்னீர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

எடப்பாடிக்கும் பன்னீருக்கும் கட்சி அளவிலும் ஆட்சி அளவிலும் அதிகார மோதல்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை அதிமுகவினரே உறுதி செய்கிறார்கள். ஏற்கனவே டெல்லி சென்று ஓ.பன்னீர் மத்திய அரசிடம் எடப்பாடி பற்றிய பல புகார்களை பட்டியலிட்டு வழங்கியதாக எடப்பாடி ஆதரவாளர்கள் புழுக்கத்தோடு கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கே துணை ஜனாதிபதி வெங்கையாவை சந்தித்து சில முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதித்தார். இந்த சந்திப்புக்குக் காரணமே, அதற்கு முன்னால் சென்னையில் இருந்த வெங்கையாவை ஓ.பன்னீரின் மகன் சந்தித்துப் பேசியதுதான் என்று சொல்லப்பட்டது.

இப்படி ஒரு முறுகலான நிலையில் நேற்று சென்னை போட் கிளப்பில் தங்கியிருந்த துணை ஜனாதிபதி வெங்கையாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது துணை ஜனாதிபதியிடம் சில காகிதங்கள் அடங்கிய ஒரு கோப்பினை துணை முதல்வர் ஒப்படைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த சந்திப்பு அதிமுகவுக்குள் மீண்டும் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon