மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஏப் 2020

சிபிஐ விசாரணை: தீர்ப்பு விவரம்!

சிபிஐ விசாரணை: தீர்ப்பு விவரம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக தாக்கல் செய்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு நேற்று (அக்டோபர் 12) உத்தரவிட்டார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.

தனது தீர்ப்பில் இருதரப்பு வாதங்களையும் தெளிவாகவும் விரிவாகவும் சுட்டிக் காட்டியுள்ளார் நீதிபதி. மனுதாரரான ஆலந்தூர் பாரதி தரப்பில், உலக வங்கி நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்தங்கள் முதல்வரின் எந்தெந்த உறவினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும், அதன் திட்ட மதிப்பு அதிகரிக்கப்பட்டது பற்றியும் தெரிவித்ததை, தீர்ப்பில் பட்டியல் போட்டு சுட்டிக் காட்டியிருக்கிறார் நீதிபதி.

அதேநேரம், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வைக்கப்பட்ட பதிலில் அரசு ஊழியர்கள் பொது நடத்தை விதியின்படி அவர்களின் எந்தெந்த உறவினர்களுக்கு சகாயம் செய்யக் கூடாது என்பதைக் குறிப்பிட்டு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் வழங்கப்பட்டவர்கள் அந்த வரையறைகளுக்கு உட்பட்டவர்கள் கிடையாது என்று வாதாடினர். அதையும் தனது தீர்ப்பில் விரிவாகவே எடுத்து வைத்திருக்கிறார் நீதிபதி.

அதன் பிறகான தனது தீர்ப்பில்,

“இந்த நீதிமன்றம் தன் அதிகார வரம்பினை அறிந்திருக்கிறது. இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் படி இந்த வழக்கில் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்பது பற்றிய முடிவுக்கு இப்போது வர முடியாது.

ஆனால் இந்த நீதிமன்றத்தில் இருதரப்பிலும் வைக்கப்பட்ட வாதங்கள், ஆதாரங்களின் மூலம் ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை என்பது வெளிப்படையாக நடக்கவில்லை என்பதே அது.

இவ்வளவு தீவிரமான புகார்களைத் தொடுத்திருக்கும் மனுதாரரிடம் கூட விசாரிக்காமல் ஓர் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி அதில் என்ன சொல்லிவிட முடியும்? இதைச் சொல்வதற்கு சாலமனின் அறிவெல்லாம் தேவையில்லை. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கை பற்றி பல கேள்விகளை மனுதாரர் தரப்பு எழுப்பியிருக்கிறது. அதெல்லாம் நியாயமாகவே படுகிறது.

ஆக லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்ப கட்ட விசாரணை முறையாக, சரியாக நடக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மனுதாரர் சொல்லியுள்ள புகார்களுக்கு ஆளானவர் முதலமைச்சராக இருக்கிறார். இதை விசாரிக்க வேண்டிய துறை அவருக்குக் கீழே வருகிறது. அதனால் சுயேச்சையான விசாரணை வேண்டும் என்று மனுதாரர் கேட்கிறார். இதற்காக அவர் பல நீதிமன்றங்களின் தீர்ப்பு விவரங்களை முன்னுதாரணத்துக்காக எடுத்து வைத்திருக்கிறார்.

நேர்மை என்பது நல்ல நிர்வாகத்தின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், நிர்வாகத்தை செயல்படுத்தும் அதிகாரிகளுக்கும் நேர்மை இருக்க வேண்டும். இந்த நீதிமன்றத்துக்கு நீதியின் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது, அரசு நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி விசாரித்து, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டிய தேவையும் இருக்கிறது” என்ற நீதிபதி, இந்திய சட்ட ஆணையம் 1998 ல் வெளியிட்ட, பொது ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய தர அளவுகோல்களையும் விரிவாக தன் தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து அவர்,

”பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து குடிமக்களின் விருப்பமாகவும் அக்கறையாகவும் இருக்கிறது. இந்நிலையில் பொதுவாழ்வில் இருப்பவரின் நேர்மை பற்றி விசாரிப்பது என்பது அவர் மேல் வெறுப்புகொண்டதாக கருதப்படக் கூடாது.

உயர் பதவியில் இருப்போர் மீது கடுமையான புகார்கள் கூறப்படும்போது அவை பற்றி சுயேச்சையான, வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும். இன்னும் சொல்லப் போனால் இதுபோன்ற கடுமையான புகார்கள் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது விழும்போது அவர்கள் தானாகவே இந்த புகார்களை சுயேச்சையான அமைப்பிடம் விசாரிக்கச் சொல்லி பொதுமக்களின் சந்தேக மேகங்களைக் களைந்திருக்க வேண்டும்.

இப்போதைய நிலையில் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்ற முடிவுக்கு வருவதை விட ஆரம்ப கட்ட விசாரணை முறையாக நடக்கவில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது.

மேற்கண்ட அவதானங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்று கூறியுள்ளார் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.

அப்பீல்

இந்தத் தீர்ப்பு தொடர்பாக அதிமுக சார்ப்பில் அப்பீல் செய்ய இருப்பதாக அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் நேற்று அறிவித்துள்ளார்.

முதல்வருக்கு எதிரான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon