மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

காவல் நிலையம் அருகே அரிவாள் வெட்டு!

காவல் நிலையம் அருகே அரிவாள் வெட்டு!

காதல் திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைய வந்த இளைஞர் உட்பட மூன்று பேரை பெண்வீட்டார் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிம்சன். இவரது மகன் ஸ்டார்லின். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நாம்தமிழர் கட்சி நிர்வாகியும், ஓவியருமான ஜெயபால் மகள் டிக் சோனா என்பவரும், கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதியன்று ஜெயபால் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்றார். அப்போது டிக் சோனா கடற்கரைச் சாலையில் உள்ள கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், இதுகுறித்து ஜெயபால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடந்த 11ஆம் தேதியன்று ஸ்டார்லினும் டிக் சோனாவும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியானது. இருவரும் குளச்சலில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கன்னியாகுமரி காவல்நிலையத்தில் விசாரணைக்காகக் குளச்சலிலிருந்து காரில் வந்தனர் ஸ்டார்லின் – டிக்சோனா தம்பதியர். இவர்களுடன் ஸ்டார்லின் உறவினர்களும் வந்துள்ளனர். இவர்கள் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பெண்ணின் தந்தை ஜெயபால் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்தனர். ஸ்டார்லின் வந்த வாகனத்தை வழிமறித்து, காரின் கண்ணாடியை உடைத்தனர்; ஸ்டார்லினைச் சரமாரியாகத் தாக்கி, பின்னர் அரிவாளால் வெட்டினர். டிக்சோனாவை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

இதைத் தடுக்கச் சென்ற ஸ்டார்லின் உறவினர்களான சுரேஷ் மற்றும் அருள் ஆகியோருக்கும் கையில் அரிவாள் வெட்டுவிழுந்துள்ளது. கால் மற்றும் தலையில் வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த ஸ்டார்லின் உட்பட மூன்று பேர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள், கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கன்னியாகுமரி டி.எஸ்.பி முத்துபாண்டியன், ஆய்வாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டனர்.

இதனிடையே, போலீசார் உரிய நேரத்தில் பாதுகாப்பு வழங்காமல், மாலையில் வருமாறு கூறி அனுப்பியதால் தான் தங்கள் மீது தாக்குதல் நடந்தப்பட்டது என படுகாயம் அடைந்த ஸ்டார்லின் உறவினர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து, சுசீந்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காதல் ஜோடியை தாக்கிய ஜெயபால் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon