மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்!

முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து கோவை மற்றும் திருநெல்வேலி இடையே 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேற்று (அக்டோபர் 12) ‘ரயில் பார்ட்னர்’ என்ற புதிய செயலி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா இதனை அறிமுகம் செய்தார். இதையடுத்துப் பேசிய அவர், இந்த செயலி மூலம் ரயில்கள் புறப்படும் மற்றும் வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரயில் பயணத்தின்போது தேவையான வசதிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அது போன்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே சில சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையிலிருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“தீபாவளியையொட்டி, வழக்கமாக 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நான்கு சிறப்பு ரயில்களும், சென்னையிலிருந்து கோவைக்கு நான்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். நடப்பாண்டில் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம் சென்னை ஆகிய கோட்டங்களில் 311 ஆளில்லாத ரயில்வே கேட்கள் நீக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே 2018-19ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை ரூ.4,434.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டுடன் ஓப்பிடும்போது 14.94 சதவிகிதம் அதிகமாகும். கடந்த செப்டம்பர் வரை 42.2 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டு விட 3.8 சதவிகிதம் அதிகம்” என்று அவர் தெரிவித்தார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon